ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு மேன் புக்கர் விருது

இந்த ஆண்டின் மேன் புக்கர் விருது ஆஸ்திரேலிய எழுத்தாளரான ரிச்சர்ட் ஃப்ளானகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு மேன் புக்கர் விருது

இரண்டாவது உலகப் போர் பின்னணியில் அமைந்த தி நேரோ ரோட் டூ த டீப் நார்த் என்ற அவரது நாவலுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்பட்டது.

மூன்று மணி நேர விவாதத்திற்குப் பிறகு பெரும்பான்மையோரின் ஒப்புதலுடன் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக தேர்வுக் குழுவின் தலைவரான க்ரேலிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில், அமைக்கப்பட்ட மரண ரயில் பாதை என்ற ரயில்பாதை கட்டப்பட்ட காலகட்டத்தின் பின்னணியில் இந்த நாவல் அமைந்துள்ளது.

லண்டனின் கில்ட் ஹாலில் நடந்த விழாவில் கார்ன்வால் சீமாட்டி காமிலா இந்த விருதை ஃப்ளானகனுக்கு வழங்கினார்.

ஃப்ளானகனின் தந்தை, இரண்டாவது உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானில் போர்க் கைதியாக இருந்தார். இந்த ரயில் பாதை அமைக்கும் பணியிலும் இடம்பெற்றார். அந்தத் தாக்கத்தில்தான் ஃப்ளானகன் இந்த நாவலை எழுதினார். 98 வயதான ஃப்ளானகனின் தந்தை நாவல் வெளிவந்த தினத்தன்று மரணமடைந்தார்.

தனது படையினருக்கு பொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்லும் வகையில் 1943ல் பர்மாவின் ரங்கூனுக்கும் தாய்லாந்தின் பாங்காக்கிற்கும் இடையில் ஜப்பான் ரயில் பாதையை அமைத்தது. யுத்தக் கைதிகள் இதில் வலுக்கட்டாயாக ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ரயில் பாதையின் கட்டுமானப் பணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.

முகாமில் நடந்த கதை

ஜப்பானிய யுத்தக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாமில் கதை நடக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன் உறவினர் ஒருவரின் இளம் மனைவி மீது காதல் வயப்பட்டிருந்த அறுவை சிகிச்சை மருத்துவர் டோரிகோ இவான்ஸின் அனுபவங்கள்தான் இந்த நாவலின் மையக் கரு.

இது ஃப்ளானகனின் ஆறாவது நாவல். இந்த நாவலை எழுதி முடிக்க அவருக்கு பனிரெண்டு ஆண்டுகள் பிடித்தன.

இந்த வருடம்தான் முதல் முறையாக மேன் புக்கர் விருது எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை கருத்தில்கொள்ளாமல், ஆங்கிலத்தில் எழுதும் அனைவருக்குமான விருதாக மாற்றப்பட்டது. இதனால், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என பல எழுத்தாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இறுதிப் பட்டியலில் இரண்டு அமெரிக்க எழுத்தாளர்கள், மூன்று பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், ஒரு ஆஸ்திரேலிய எழுத்தாளர் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு புக்கர் விருது நியூஸிலாந்தின் எலனோர் காட்டன் என்பவருக்கு வழங்கப்பட்டது. தி லூமினரீஸ் என்ற நாவலுக்காக தனது 28வது வயதில் புக்கர் விருதைப் பெற்ற எலனோர், இந்த விருதைப் பெற்றவர்களிலேயே மிகவும் இளையவராவார்.