செய்தியாளர்களுக்கு பதிலளித்த பிரேசில் சீரியல் கொலைகாரர்

பிரேசிலில் குறைந்தது 39 பேரைக் கொலைசெய்ததாக காவல்துறையினரிடம் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற இளைஞர் ஊடகவியலாளர்களுக்கு முன்னால் வந்து கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தியாகோ ரொச்சா

தியாகோ ரொச்சா என்ற இந்த 26 வயது இளைஞர் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக்கோர விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

காவல் ஊழியரான தியாகோ ரொச்சா தான் மனநோயாளி என்று எதனையும் கூறவில்லை.

ஆனால், அவ்வப்போது தனது மனதுக்குள் எழுந்த ஆத்திர உணர்வே மற்றவர்களை கொலைசெய்யத் தூண்டியதாகக் கூறியுள்ளார்.

பிரேசில் வரலாற்றில் மர்மமான சீரியல்-கொலைகாரர்களிகளில் ஒருவர் அவர் என்பதை உணர்கின்றாரா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ரொச்சா அசட்டையாக தோளை அசைத்தவாறு புன்னகைத்துள்ளார்.

கோயாஸ் நகரத்திலும் சுற்றுவட்டாரத்திலும் 3-ஆண்டு காலப்பகுதியில் எதேச்சையாக அகப்பட்ட இளம் பெண்கள், வீடற்றவர்கள், ஒருபால் உறவுக்காரர்கள் என 39 பேரை தியாகோ ரொச்சா கொலை செய்துள்ளார்.