பாப்பரசரின் பரிந்துரைகள் நிறைவேறவில்லை

கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகள் ரீதியான நிலைப்பாடுகளில் மாற்றம் கோரி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வத்திக்கான் ஆயர்களின் உயர் பேரவை நிராகரித்துள்ளமை தொடர்பில் கத்தோலிக்க ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை na
Image caption பாப்பரசரின் எல்லா பரிந்துரைகளுக்கும் ஆயர்களிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறமுடியவில்லை

ஒருபால் உறவுக்கார்கள், விவாகரத்தின் பின்னர் மறுமணம் புரிபவர்கள் உள்ளிட்ட தரப்பினரையும் அங்கீகரிக்கும் விதத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாடுகள் அமையவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த முன்வரைவு- ஆவணம் வலியுறுத்தியிருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காத ஆயர்களின் உயர் பேரவை, குறித்த ஆவணத்தை மீள மாற்றியமைத்துள்ளது.

இருந்தாலும், ஒருபால் உறவுக்காரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று இறுதி ஆவணம் கூறியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸால், தனது எல்லா பரிந்துரைகளுக்கும் ஆயர்களிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறமுடியாமல் போய்விட்டது.

நவீனகால அணுகுமுறைகளுக்கு ஏற்ப கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகள் அமைய வேண்டும் என்ற போக்கிலேயே பாப்பரசர் பிரான்சிஸ் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

ஆனாலும், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் கத்தோலிக்கர்கள் எடுக்கும் ஒழுக்கம்சார்ந்த தெரிவுகளுக்கு திருச்சபை மதிப்பளிக்க வேண்டும் என்கின்ற மாற்றத்திற்கு மட்டும் ஆயர்களின் உயர் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.