குடியேறிகள்: எல்லைக் காவலில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டுக் குடியேறிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால், இந்தப் பிரச்சனையை கையாள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிரசல்ஸில் கூடி ஆராய்கின்றனர்.

மத்திய தரைக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும் பொறுப்பிலிருந்து இத்தாலி விலகிக் கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டம் நடக்கின்றது.

பிரிட்டனும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு வழங்கிவந்த ஒத்துழைப்பை கைவிடுவதாக வெளியுறவுச் செயலகம் கூறியுள்ளது.

இப்போது இந்தப் பணி ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிய செயலணி ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

எனினும், இந்த செயலணி தேடுதல் மற்றும் மீடபுப்பணிகளில் ஈடுபடுவதிலும் பார்க்க எல்லைக் காவல் நடவடிக்கையிலேயே கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

இதனிடையே, நடுக்கடலில் அதிகளவான மக்களை பலியாகச் செய்து, வெளிநாட்டுக் குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கையை வெட்கக்கேடானது என்று ஐரோப்பிய அகதிகளுக்கான கவுன்சில் கூறியுள்ளது.

ஐரோப்பாவுக்குள் நுழையும் முயற்சியில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கடந்த ஆண்டில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இத்தாலிய கடற்படை சுமார் ஒன்றரை லட்சம் பேரை காப்பாற்றியிருக்கிறது.

மக்கள் ஏன் ஐரோப்பாவுக்குள் தப்பிவர முயற்சிக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை கண்டறிந்து, அந்தப் பிரச்சனைகளை கையாள ஐரோப்பிய ஒன்றியம் பெருமளவில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய அகதிகளுக்கான கவுன்சில் கூறியுள்ளது.