மலாலாவும், சத்யார்த்தியும் நொபல் பரிசைப் பெற்றனர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசுப் சாயிக்கும், இந்தியாவில் சிறார் நலன் குறித்த செயல்பாடுகளை முன்னேடுக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கும் நொபல் பரிசு இன்று வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நோபல் பரிசுடன் மலாலா மற்றும் சத்யார்த்தி

பரிசைப் பெறும் 17 வயது மலாலா, மிகக் குறைந்த வயதில் நொபல் பரிசை வென்றவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

அமைதிப் பரிசுடன் கொடுக்கப்படும் 1.4 மில்லியன் டாலர்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். தனக்குக் கொடுக்கப்படும் பணத்தை மலாலா அறக்கட்டளை மூலமாக தனது சொந்த ஊரான ஸ்வாட் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் பள்ளிக் கல்வி வசதியை மேம்படுத்த தான் செலவிடப்போவதாக மலாலா தெரிவித்துள்ளார்.

தனது உரையில் கல்வி குறித்து அதிகம் வலியுறுத்திய மலாலா, எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்றார். தனது இளம் வயது குறித்துக் குறிப்பிட்ட அவர், தன்னுடைய இளைய சகோதரர்களுடன் தொடர்ந்து சண்டை போடும் ஒருவருக்கு நொபல் பரிசு கொடுப்பது இப்போதுதான் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிபிசியிடம் பேசிய மலாலா, தனது அரசியல் ஆசைகள் பற்றிப் பேசினார். தன்னுடைய நாடான பாகிஸ்தானுக்கு சிறப்பாக பணியாற்ற பிரதமர் பதவி கிடைத்தால் முடியும் என்றால் பிரதமராவது தன்னுடைய விருப்பம் என்றார்.

பரிசைப் பெற்றுக் கொண்ட பிறகு உரையாற்றிய சத்யார்த்தி, குரல் கேட்காத, வெளியில் தெரியாத பல லட்சம் அழுகைக் குரல்களை தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவித்தார்