இஸ்லாமிய அரசு - மிகவும் வசதி படைத்த ஜிகாதி அமைப்பு

ஜிகாதி அமைப்புகள், தம்முடைய பணத் தேவைகளுக்காக முன்பு இருந்ததைப் போல் பணக்காரர்களின் நன்கொடைகளை நம்பியிருக்கவில்லை என்று பிபிசியினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜிகாதி போராளிகள்

இஸ்லாமிக் ஸ்டேட்( இஸ்லாமிய அரசு), தாலிபான் மற்றும் சோமாலியாவில் செயல்படும் அல் ஷபாப் போன்றவை மிரட்டிப் பணம்பறிப்பது, கடத்தல் செய்வது, இயற்கை வளங்களை விற்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு, தங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்வதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இஸ்லாமிய அரசு

ராயல் யுனைடட் சர்விசஸ் இன்ஸ்டிடூட்டில் உள்ள நிபுணர்களால் தொகுக்கப்பட்ட இந்த ஆய்வில், இஸ்லாமிய அரசு அமைப்புதான் தற்கால வரலாற்றில் மிக அதிக செல்வம் மிக்க அமைப்பு என்று தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமானம் கிடைப்பதாக கருதப்படுகிறது.

போதைப் பொருட்களை கடத்துவதன் மூலமும், வசதிபடைத்தோரிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகள் மூலமாகவும் தாலிபான்களுக்கு ஆண்டுக்கு 400 மில்லயன் டாலர்கள் கிடைக்கிறது. போக்கோ ஹராம் குழு, கடத்தல் செய்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களை பணயத்தொகையாகப் பெறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.