காட்டு யானைகளை வெளிநாடுகளிடம் விற்பது சரியே: ஜிம்பாப்வே அரசு

காட்டு யானைகளைப் பிடித்து அவற்றை சீனா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசில் உள்ளவர்களுக்கு விற்கும் திட்டத்தை ஜிம்பாப்வே நியாயப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை c
Image caption வேட்டை காரணாக ஆப்பிரிக்க யானைகள் அழிந்து வருகின்றன

யானை ஒன்றுக்கு 40 ஆயிரம் டாலர்கள் என்ற விலைக்கு சுமார் 60 யானைகளை விற்க ஜிம்பாப்வே முடிவு செய்துள்ளது.

இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தன்னிடம் உள்ள மிகப் பெரிய வனப் பகுதியை மேம்படுத்த ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

ஹவாங்கே வனப் பகுதியை பாதுகாக்க ஆண்டுதோரும் தேவைப்பும் 2.3 மில்லயன் டாலர்களை இந்த விற்பனை மூலம் பெறமுடியும் என்று அந்த வனப் பகுதியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வனப் பகுதி மேம்பாட்டுக்கு அரசின் நிதி உதவி கிடைக்காத நிலையில், விலங்குகளை விற்பதே தமக்கு இருக்கும் ஒரே வழி என அவ்வனப்பகுதிக்குப் பொறுப்பான ஜெப்பிரிஸ் மான்டிபானோ தெரிவித்துள்ளார்.

வேட்டையை தடுக்கும் பணிகளை அதிகப்படுத்தவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த வனப்பகுதியில் 293 யானைகள் கொல்லப்பட்டன.

இந்த ஆண்டு இதுவரை 139 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

தற்போது சீனாவைச் சேர்ந்தவர்கள் 27 யானைகளையும், பிரன்ஸ் மற்றும் ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்தவர்கள் தலா 15 யானைகளையும் வாங்க முன்வந்துள்ளனர்.

அதேநேரம் இதுபோல செய்வது மனிதத்தன்மையற்றது என்று விமர்சித்துள்ள விலங்குகள் நல அமைப்புகள், வேட்டை காரணமாக யானைகள் வேகமாக அழிந்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக ஏற்கனவே 34 யானைக் குட்டிகளும், ஏழு சிங்கங்களும், சிலவகை குளம்பின விலங்குகளும் பிடிக்கப்பட்டுள்ளதற்கு ஜிம்பாப்வே வனநல உயிரிகள் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே கடும் கண்டனைத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விலங்குகள், வெகுதூரமுள்ள நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போதே இறந்துபோகலாம் என்று அந்த அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.