இஸ்லாத்துக்கு எதிரான பேரணியில் அதிகமானோர் பங்கேற்பு

  • 6 ஜனவரி 2015

குடியேறிகளுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக ஜெர்மனியில் தொடர்ந்து நடந்து வரும் கூட்டங்களில் , ட்ரெஸ்டன் நகரில் நடந்த ஒரு பேரணியில் ,முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெகிடா பேரணியில் கலந்து கொண்டவர்கள்

நாட்டின் கிழக்கே டிரஸ்டென்னில் நடைபெற்ற இஸ்லாமிய எதிர்ப்புப் பேரணியில் பதினெட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். கடந்த அக்டோபரில் இந்த நகரில் ஆரம்பித்த பெகிடா என்ற அமைப்பில் சில நூறு பேர்தான் இருந்தனர்.

இந்தப் பேரணிகளுக்கு எதிரான கூட்டங்களும் தற்போது அதிக அளவில் நடக்கின்றன. பெகிடா, சகிப்புத்தன்மையின்மையை பரப்புவதாகவும் , இனரீதியான வெறுப்பை தூண்டுவதாகவும் அதன் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

பெகிடா அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், பெர்லினுக்குள் நுழைவதை ஐயாயிரம் பேர் தடுத்துள்ளனர் என்று போலிசார் கூறுகின்றனர்.

கலோன் நகரில் இஸ்லாமிய எதிர்ப்பு பேரணிகளுக்கு எதிராக உள்ளூரில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக பெகிடாவின் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல், சகிப்புத்தன்மையை நாட்டு மக்கள் பேண வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் தஞ்சம் கோரிகளுக்கு தன்னுடைய நாடு தொடர்ந்து அடைக்கலம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.