பெஷாவர் ஷியா பள்ளிவாசல் மீது தாக்குதல், 10 பேர் பலி

  • 13 பிப்ரவரி 2015
Image caption 'தற்கொலை அங்கிகளை அணிந்துவந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்'

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றின்மீது ஆயுததாரிகள் மூவர் நடத்திய துப்பாக்கி மற்றும் கைக்குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பெஷாவரில் செல்வந்தர்கள் வசிக்கும் ஹயாட்டபாத் மாவட்டத்தில் உள்ள இந்தப் பள்ளிவாசலில் காவல்துறையினரும் ஆயுததாரிகளும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டுள்ளனர்.

ஆயுததாரிகளில் ஒருவர் தன்னைத் தானே வெடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் இன்னொருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் மற்றையவர் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிந்த் மாகாணத்தில் ஷிகார்புர் மாவட்டத்தில் ஷியா பள்ளிவாசல் ஒன்றின் மீது இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த பல ஆண்டுகளில் நடந்துள்ள மிகமோசமான இந்தத் தாக்குதலுக்கு தாலிபனுடன் தொடர்புடைய சுன்னி ஆயுததாரிகளே பொறுப்பேற்றிருந்தனர்.

பெஷாவரில் இன்று நடந்த தாக்குதல் சம்பவத்தை காண்பித்த தொலைக்காட்சிப் படங்களில், சிலர் காயமடைந்தவர்களை தங்களின் தோள்களில் சுமந்துசெல்வதைக் காணமுடிந்தது.

தற்கொலை அங்கிகளை அணிந்திருந்த நிலையில் ஆயுததாரிகள் பள்ளிவாசலை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக அப்பிரதேசத்தின் தலைமைப் பொலிஸ் அதிகாரி மியான் சயீட் கூறினார்.

ஆனால், ஒருவரால் மட்டுமே அவரது வெடிபொருளை வெடிக்கச் செய்ய முடிந்துள்ளது.

மற்ற இருவரும்ள் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைக்குண்டுகளையும் வீசியுள்ளனர்.

இன்றைய தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமைகோரவில்லை.