இராக்கில் 45 பேர் எரித்துக் கொலை

  • 17 பிப்ரவரி 2015

இராக்கின் மேற்கு நகரான அல்-பாக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இஸ்லாமிய அரச தீவிரவாதிகள்

இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக இராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நகரின் பல பகுதிகளை கைப்பற்றினார்கள்.

பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினர் இருக்கும் வீடுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இருக்கும் வீடுகள் சிலவற்றை இஸ்லாமிய அரசு போராளிகள் சுற்றிவளைத்திருக்கிறார்கள். இதனையடுத்து , இந்த பொலிஸ் உயரதிகாரி அரசாங்கத்திடமும், சர்வதேச சமூகத்திடமும் உதவி கோரியுள்ளார்.

லிபியாவில் காப்டிக் கிறிஸ்தவர்கள் 21 பேர் இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சில தினங்களில் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.