ஆஸ்திரேலிய பிரதமர் இந்தோனேசியாவுக்கு எச்சரிக்கை

  • 18 பிப்ரவரி 2015

போதை மருந்து கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஆஸ்திரேலியர்களை இந்தோனேசியா விடுவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அந்த நாடு புறக்கணித்தால், தான் மோசமாகக் கைவிடப்பட்ட ஒரு நிலையை உணர்வேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆஸ்திரேலிய பிரதமர் இந்தோனேசியாவுக்கு எச்சரிக்கை

மரண தண்டனையை எதிர்நோக்கும் இந்த இரு ஆஸ்திரேலியர்களில் அண்ட்ரூ ஷான் என்பவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரனும் அடங்குகிறார்கள்.

அடுத்த சில நாட்களில் மரண தண்டனை வழங்கப்படவுள்ள வெளிநாட்டு போதை மருந்து கடத்தல்காரர்களில் இவர்கள் இருவரும் அடங்குவதாக இந்தோனேசியா உறுதி செய்ததை அடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு சுனாமியை அடுத்து ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்ற பெருமளவிலான நிதி உதவியை இந்தோனேசியா மறந்துவிடக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு, அச்சுறுத்தல்களுக்கு எவரும் பதிலளிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது.