நைஜர் நாட்டின் மீது வான்தாக்குதல்; 37 பேர் பலி

  • 19 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை Getty
Image caption நைஜர் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் காரணமல்ல என நைஜீரியா தெரிவித்துள்ளது.

நைஜர் நாட்டின் தென்பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள அபதாம் கிராமத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்தவர்கள் மீது, அடையாளம் தெரியாத விமானம் குண்டுகளை வீசியது.

அபதாம் கிராமத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அங்கிருந்த மசூதி சேதமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு விமானம் மூன்று குண்டுகளை வீசிவிட்டுச் சென்றதாக அபதாமின் துணை மேயர் தெரிவித்துள்ளார். உள்ளூர் தலைவர் ஒருவரின் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தவர்கள் மீது ஒரு குண்டு விழுந்தது.

இதில் இருபதற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக துணை மேயர் தெரிவித்தார்.

இந்த வான் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், தாங்கள் காரணமல்ல என நைஜீரியா தெரிவித்துள்ளது.

"இம்மாதிரி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக எங்கள் ஆட்களிடமிருந்து எந்தத் தகவலும் எனக்குத் தெரிந்துவரவில்லை" என நைஜீரிய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் தெலே அலோங் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராமுக்கு எதிரான நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

போர்னோ மாநிலத்தில் போகோ ஹராமுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதலின்போது, பல போகோ ஹராம் பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயுதங்களும் கருவிகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் நைஜீரியாவின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போகோ ஹராம் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நைஜர், சத், கேமரூன் ஆகிய நாடுகள் நைஜீரியாவுடன் ராணுவக் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.

தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட போகோ ஹராம் இயக்கத்தினரின் எண்ணிக்கையை நைஜீரியப் படைகள் அதிகரித்துக் கூறுவதாக குற்றம்சாட்டப்பட்டுவருகிறது.