மாலத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைது

  • 22 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரசாங்க எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே மொஹமட் நஷீட் கைதாகியுள்ளார்

மாலத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்- ஐ அந்நாட்டு அதிகாரிகள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

மாலத்தீவில் ஜனநாயக ரீதியில் தெரிவான முதலாவது அதிபரான மொஹமட் நஷீட், தலைநகரில் அரசாங்க எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தப் பேரணி நடப்பதற்கு 6 நாட்கள் உள்ள நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்துல்லா யாமீன் அதிபராக தெரிவானது முதல் கடந்த 15 மாதங்களாக மாலத்தீவு அரசியல் குழப்பங்களால் திணறிவருகின்றது.

அங்கு, முன்னாள் இராணுவ அதிகாரியான பாதுகாப்பு அமைச்சரை அண்மையில் பதவி விலக்கிய அதிபர், இராணுவ சதிப்புரட்சி ஒன்றுக்கு அவர் திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டி கைதுசெய்துள்ளார்.

கடும்போக்கு சுன்னி முஸ்லிம் தேசமான மாலத்தீவிலிருந்து வெளியேறிய குறைந்தது 200 பிரஜைகள், இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவுடன் இணைவதற்காக அண்மைக்காலங்களில் மத்திய கிழக்கு சென்றுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர்.

ஆயுதப் போராட்டத்தை அரசாங்கம் ஊக்குவிப்பதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அந்தக் குற்றசாட்டை அரசாங்கம் உறுதியாக மறுக்கின்றது.