நங்க பர்வத படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்

  • 27 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption உலகின் 9வது உயரமான சிகரமான நங்க பர்வதம், மலையேற்ற வீரர்களிடம் பிரசித்தி பெற்றது.

2013ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் நங்க பர்வத மலையில் ஏறுவதற்காக முகாமிட்டிருந்த ஒரு குழுவைக் கொலை செய்ததாக விசாரிக்கப்பட்டுவந்த இரண்டு தீவிரவாதிகள், சிறையிலிருந்து தப்பியுள்ளனர்.

அவர்களைத் தீவிரமாகத் தேடிவருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுடன் தப்பிச்சென்ற ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு நபர் பிடிக்கப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலையேறுபவர்களின் முகாமைத் தாக்கிய தாலிபன்கள், அங்கிருந்த பத்துப் பேரை மண்டியிடச் செய்து சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இருபது பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பாகிஸ்தானில் வெளிநாட்டவர் மீது நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது.

உள்ளூர் பாதுகாப்புப் படையினரைப் போல உடையணிந்து வந்த 15 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா, சீனா, உக்ரேன், ஸ்லொவோக்கியா, லிதுவேனியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள இதில் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு உதவியாளரும் கொல்லப்பட்டார். அவர் ஷியா முஸ்லிம் என்பதால், அவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

உலகில் 9வது உயரமான சிகரமான நங்க பர்வதம், கடல் மட்டத்திலிருந்து 8,126 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்த மலையை ஏறுவதற்கு மலையேற்ற வீரர்கள் இங்கே குவிவது வழக்கம்.