ஆப்கான் அரசு பெண்ணுரிமையாளர்களுக்கு உதவ மறுக்கிறது: அம்னெஸ்டி

ஆப்கானிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி நிகழ்வு (ஆவணப்படம்) படத்தின் காப்புரிமை AP
Image caption ஆப்கானிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி நிகழ்வு (ஆவணப்படம்)

ஆப்கானிஸ்தானில் பெண்ணுரிமை மேம்பாட்டுக்காக பாடுபடும் முக்கிய பெண்களை ஆதரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆப்கானிய அரசு முன்னெடுக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பெண்ணுரிமைகளை பாதுகாக்கப் போராடுபவர்கள் என்று அம்னெஸ்டி வர்ணிக்கும் ஐம்பது பேரிடம் அந்த அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவில் அவர்கள் அனைவரும் அதிகரித்த அளவில் வன்முறைகளை எதிர்கொள்வதாக தெரியவந்திருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் எச்சரிக்கைகளாகவும், பாலியல் தாக்குதல்களாகவும், படுகொலைகளாகவும் வெளிப்படுவதாக அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை புலனாய்வு செய்யாமல் ஆப்கானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக புறந்தள்ளுவதாகவும் அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பெண்ணுரிமை போராளிகள் ஏற்படுத்திய சாதகமான மாற்றங்களை பார்த்த பிறகும் சர்வதேச சமூகம் அவர்களை கைவிட்டுவிட்ட தாகவும் அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.