ஐ எஸ் தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்கள் "வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை"

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐ எஸ் அமைப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடூரச் செயல்களை செய்துள்ளது என்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அரச தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகள்

இராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் மிகக் கொடூரமான வகையிலான செயல்களை செய்துள்ளனர் என்று தி ஹேகிலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அரச வழக்கறிஞரான ஃபதௌ பென்சௌடா கூறியுள்ளார்.

எனினும் அந்த இரு நாடுகளும் அந்த நீதிமன்றதின் உறுப்பினர்களாக இல்லாத காரணத்தினாலும், அந்த அமைப்பின் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு கோராதாதாலும் தமக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பலர் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்படுவது, பாலியல் அடிமைகளாக பெண்களை வைத்திருப்பது, பாலியல் வன்செயல், சித்திரவதை மற்றும் இனப்படுகொலை போன்ற செயல்களை ஐ எஸ் தீவிரவாதிகள் செய்துள்ளனர் என்றும் பென்சௌதா அம்மையார் கூறியுள்ளார்.