பாண்டா கரடியைக் கொன்று தோலை உரித்த 10 சீனர்கள் கைது

படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption பாண்டா கரடியை கொன்ற 10 பேர் கைது

பாண்டா எனப்படும் சீனக் கரடியைக் கொன்று அதன் தோலை உரித்த குற்றச்சாட்டில் 10 பேர் தென் மேற்கு சீனாவில் போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பாண்டா கரடியின் தோல், சுமார் 10 கிலோ எடையுள்ள பாண்டா இறைச்சி மற்றும் பல்வகை எலும்புகளையும் வைத்திருந்த இந்தக் குழு யுன்னான் மாகாணத்தில் தடுத்துவைக்கப்பட்டதாக சீனாவின் அரச ஊடகம் கூறுகிறது.

இந்தச் செய்தி குறித்து சீனாவின் ட்விட்டர் போன்ற தளமான வெய்போவில் ஆயிரக்கணக்கானோர் கண்டனக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பாண்டா கரடிகள் சட்டவிரோதமாகக் கொல்லப்படுவது சீனாவில் மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒன்று. சீனாவில் அழிந்து வரும் உயிரினங்கள் தேசிய பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன.