காதல் பூட்டுக்களை களையத் தொடங்கியது பாரிஸ் மாநகரசபை

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள சென் ஆற்றிற்கு மேலாக உள்ள பாலத்தில், தங்கள் காதல் அழியாமல் நிலைத்திருக்கச் செய்வதற்காக காதலர்களால் இணைக்கப்பட்ட லட்சக்க்கணக்கானப் பூட்டுக்களை, மாநகரசபை ஊழியர்கள் அகற்றத் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption காதல் உறுதிபட பூட்டப்படும் பூட்டுக்கள்

காதலர்களது இந்தக் பூட்டுக் கலாச்சாரம், 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது.

ஆனால் ஒட்டுமொத்தப் பூட்டுக்களின் எடையானது, பாலத்தின் கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனும் அச்சம் எழுந்துள்ளதால் பூட்டுக்களை அகற்றுவதற்கு, நகர அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption மகிழ்ச்சியில் காதல் ஜோடி ஒன்று

இதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான இந்தப் பூட்டுக்கள் அப்பாலத்தின் அழகைக் கெடுப்பதுடன், ஆற்றில் பயணிக்கும் கப்பல்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனும் அச்சமும் எழுந்துள்ளதாக பாரிஸ் நகர அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தங்களது காதல் என்றும் பிணைபுடன் இருக்க வேண்டும் எனும் நோக்கில் காதலர்கள் அந்தப் பாலத்தில் பூட்டைப் பூட்டி சாவியை அந்த நதியில் வீசிவிடுவது எனும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பூட்டுக்களின் எடை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என பாரிஸ் மாநகரசபை கூறுகிறது

அவ்வகையில் சுமார் பத்து லட்சம் பூட்டுக்கள் அந்தப் பாலத்தில் பூட்டப்பட்டுள்ளன. அவற்றின் எடை 45 டண்கள் அளவுக்கு உள்ளன.

கடந்த ஆனடு இந்தப் பூட்டுக்களின் எடை தாங்காமல் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 1804 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பாலத்தில் பூட்டு பூட்டும் கலாச்சாரம் திங்கட்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது என பாரிஸ் நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.