வேட்டைத் தடையை தளர்த்தியது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வேயின் பெருமைமிக்க சிங்கம் என்று கருதப்பட்ட 'சிசில்' சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அது வாழ்ந்த வனவிலங்கு சரணாலயத்தில் வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பகுதி அளவில் அந்நாடு நீக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption கொல்லப்பட்ட சிசில் சிங்கம், சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திருந்தது

ஹவாங்கே தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு வெளியே, சட்டவிரோதமான வேட்டை என்று கருதப்படும் ஒரு சம்பவத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரால் சிசில் கொலை செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

எனினும் அந்த வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இரண்டு பிரதேசங்கள் மற்றும் அதன் அருகில் இருக்கும் உள்ளூர் கிராமவாசிகள் வசிக்கும் பகுதிகள் ஆகிய இடங்களை அண்மித்த பகுதிகளில் இந்தத் தடை தொடர்ந்து இருக்கும் என ஜிம்பாப்வேயின் வனவுயிர் பாதுகாப்பு நிறுவனமும், தேசியப் பூங்கா பாதுகாப்பு அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption சிங்கத்தைக் கொன்ற அமெரிக்க பல் மருத்துவரை நாடு கடத்த ஜிம்பாப்வே கோரிக்கை

அதேவேளை எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் வேட்டையாடுவதற்கு தடை நீக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சிங்கம், சிறுத்தை மற்றும் யானைகளின் வேட்டைக்கு எழுத்துபூர்வமான அனுமதி இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வேட்டை நடவடிக்கையின்போது வனவிலங்கு பூங்காவின் அலுவலர்களின் மேற்பார்வை இருக்க வேண்டும் எனவும் அரச உத்தரவு கூறுகிறது.

வெளிநாட்டிலிருந்து தமது நாட்டுக்கு வந்து இயற்கை வளங்களைச் சூறையாடுவது தடுக்கப்பட வேண்டும் என திங்கட்கிழமை அதிபர் ராபர்ட் முகாபே வலியுறுத்தியிருந்தார்.