அடிமை வணிகத்துக்கு நஷ்ட ஈடு - ஏன்? யார் தரவேண்டும் ?

  • 3 அக்டோபர் 2015

சில நாட்களுக்கு முன்னர் கரீபியன் பகுதி தீவு நாடான ஜமைக்கா சென்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அந்த நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவ பல பில்லியன் டாலர்களைத் தர பிரிட்டன் முன்வந்திருப்பதைப் பற்றி சொல்லி கவனத்தைப் பெறலாம் என்று நம்பியிருந்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அடிமை நிலையை சித்தரிக்கும் சிற்பங்கள்

ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் ஆப்ரிக்க வம்சாவளியினராக இருக்கும் ஜமைக்காவில் அனைவரது கவனமும், பிரிட்டனின் கடந்த காலத்தைய மிக அவமானகரமான பாவச் செயல்களில் ஒன்றான, அடிமை வணிகத்தைப் பற்றி டேவிட் கேமரன் பேசுவாரா என்பதிலேயே இருந்தது.

அவர் அது பற்றிக் குறிப்பிடத்தான் செய்தார். ஆனால் ஜமைக்கா ஆர்வலர்கள் எதிர்பார்த்தபடி அல்ல.

"மிகவும் இருண்ட ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்த நண்பர்கள் என்ற வகையில், இந்த மிகவும் வலிமிகுந்த விஷயத்திலிருந்து நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறமுடியும் என்று நம்புகிறேன்", என்றார் கேமரன்.

ஆனாலும், இந்த சர்ச்சை மறைந்து போகாது என்று தோன்றுகிறது. இது, 18ம் நூற்றாண்டின் காலனிய சக்திகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நடந்த அடிமை வர்த்தகத்தின் மூலம் பெற்ற பொருளாதார லாபங்களுக்கு இப்போது ஈடுகட்ட வேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் நீண்டகாலமாக நடத்திவரும் யுத்தத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த வர்த்தகத்தின் மூலம் 1.2 கோடிக்கும் மேலான ஆப்ரிக்க கறுப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

ஆனால், ஊதியம் தரப்படாத இந்த உழைப்பின் மூலம் மிக அதிக லாபம் பெற்ற பிரிட்டன் ஏன் அதற்குப் பரிகாரம் செய்ய மறுக்கிறது?

படத்தின் காப்புரிமை PA
Image caption ஜமைக்காவில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன்

தூரத்து உறவினர்

இந்த நஷ்ட ஈடு கோரிக்கை ஒரு பொதுவான மட்டத்தில் மட்டும் எழுப்பப்படவில்லை. அது கேமரனைப் பொறுத்த அளவில் சற்று அந்தரங்கமானதும் கூட.

கேமரனின் குடும்ப முன்னோர்கள் வழியில், அவருக்கு, ஒன்று விட்ட என்று சொல்வோமே, அது போல, ஆறு முறை இடைவெளி விட்ட மாமா மகன், சர் ஜேம்ஸ் டஃப் என்ற ஒருவர் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவராகக் கூறப்படுகிறார்.

19ம் நூற்றாண்டில் பிரிட்டன் அடிமை வர்த்தகத்தை சட்டவிரோதம் என்று அறிவித்த பின்னர், இந்த ஜேம்ஸ் டஃப் கட்டுப்பாட்டில் இருந்த 200 ஜமைக்கா அடிமைகள் விடுதலை செய்யப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு ஈடாக பெருந்தொகையைப் பெற்றார் என்று ஆவணங்கள் கூறுகின்றன.

கேமரனுக்கு தூரத்து உறவினரான டஃப், உண்மையில் இந்த லாபமீட்டும் வர்த்தகத்தில் சொத்துக் குவித்த பல பிரிட்டிஷ் மேல்மட்ட பெரும்புள்ளிகள் பலரில் ஒருவர்தான்.

அந்தக் காலகட்டத்தில் குவிக்கப்பட்ட செல்வத்தில் சுமார் 20 சதவீதம் இந்த அடிமை வர்த்தகத்தில் கிடைத்த பணம்தான் என்று கணிக்கப்படுகிறது.

அந்த காலத்தில் பிரிட்டிஷ் வர்த்தகர்கள் மட்டுமே மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்கா கண்டத்துக்கும், கரீபியன் தீவுகளுக்கும் மலைத் தோட்டங்களில், கொடூரமான நிலைமைகளில் உழைக்க சுமார் 30 லட்சம் பேரை கப்பலில் அனுப்பினார்கள்.

இந்த ஊதியம் தராத உழைப்பைச் சுரண்டியதிலிருந்து அடிமை வர்த்தகர்களுக்குக் கிடைத்த லாபம் அளவிட முடியாதது.

படத்தின் காப்புரிமை GETTY

இந்த வாதங்களைத்தான் 15 கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பான, கேரிகாம் இழப்பீட்டு ஆணையம் என்ற அமைப்பின் தலைவர், ஹிலாரி பெக்கிள்ஸ் முன்வைத்து, ஐரோப்பா செய்த தவறுகளுக்குப் பரிகாரம் கோருகிறார்.

"நாங்கள் தர்மம் கோரவில்லை. ஏற்பட்ட நிலைமைக்கு உங்கள் பங்கிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு மறுவாழ்வு மற்றும் புத்துயிர்ப்புக்கான ஒரு கூட்டுத் திட்டத்தில் பங்களிக்க வேண்டுமென்றுதான் கோருகிறோம்" என்று கேமரனின் விஜயத்தின் போது, " ஜமைக்கா அப்சர்வர்" பத்திரிகையில் வெளியிட்ட ஒரு திறந்த மடலில் பெக்கிள்ஸ் எழுதினார்.

இந்த கேரிகாம் ஆணையம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஹாலந்து போன்ற கரிபியன் பகுதியில் இயங்கிய முன்னாள் அடிமை வர்த்தக நாடுகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றைத் தொடங்க 2013ல் உருவாக்கப்பட்டது.

அவர்கள் மிரட்டுவதை வைத்துப் பார்க்கும்போது, சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக, இந்த நாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பது அவர்கள் திட்டமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வருத்தம் உண்டு, ஆனால் குற்ற உணர்வு இல்லை

ஆனால் இழப்பீடு தரவேண்டும் என்ற வாதத்தை பிரிட்டன் நிராகரிக்கிறது. அது சரியான அணுகுமுறையல்ல என்று கூறுகிறது.

மேலும் இந்தப் பிரச்சனையை முதன்முதலாக எதிர்கொள்வது டேவிட் கேமரன் அல்ல. 2006ல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கடந்த கால அடிமை வர்த்தகம் தொடர்பாக "ஆழ்ந்த வருத்தம்" தெரிவித்தார், ஆனால் வரலாற்று ரீதியாகக் குற்றம்புரிந்ததாக அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு ஒரு சில மாதங்கள் முன்னர்தான் இங்கிலாந்து திருச்சபையேகூட இந்த மனிதாபிமானமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபமீட்டியதை ஒப்புக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை GETTY
Image caption பிரிட்டிஷ் வர்த்தகர்கள் மட்டுமே சுமார் 30 லட்சம் அடிமைகளை மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கப்பலில் அனுப்பினர்

ஆனால் பிரிட்டிஷ் அரசின் இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னர் என்ன நியாயம் இருக்கிறது?

"வருத்தப்படுகிறேன்" என்பதற்கும் "பொறுப்பேற்கிறேன்" என்பதற்கும் சொல்லாடல் ரீதியான வேறுபாடு இருக்கிறது.

வார்த்தை விளையாட்டுக்கு அப்பால், பொருளாதாரப் பரிமாணமும் இருக்கிறது.

முழுமையாக மன்னிப்பு கேட்க அரசு தயங்குவது, அப்படி செய்தால், அது நிதி ரீதியான கடப்பாடுகளுக்கு உள்ளாக வேண்டிவரும் என்ற கவலை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆச்சரியப்படத்தக்கவகையில், இந்த மனித வர்த்தகம் தொடர்பாக இழப்பீடு வாங்கிய ஒரே தரப்பு என்பது இந்த சுமார் 46,000 அடிமை - உரிமையாளர்கள்தான். அடிமை முறை ஒழிப்பு சட்டம் 1833ல் கொண்டுவரப்பட்ட பின்னர், இந்த அடிமை உரிமையாளர்கள் அவர்களது வர்த்தகங்களில், மனித அடிமைகளை வைத்திருக்க முடியாது என்ற காரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக , பிரிட்டிஷ் அரசு 30 மிலியன் டாலர்களை அவர்களுக்குத் தந்தது.

அந்தத் தொகை இப்போதைய பண மதிப்பில் பார்த்தால், 3 பிலியன் டாலர்களாகும்.

ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு ஒரு தம்பிடி கூட கிடைக்கவில்லை.

அடிமை முறைக்கு இழப்பீடு என்ற விஷயத்துக்கு வந்தால், அடிமைகள் செய்த ஊதியம் இல்லாத வேலைக்கு, இன்றைய பண மதிப்பில் எவ்வளவு பணம் தந்திருக்கவேண்டும் என்று கணக்கிடுவது, இழப்பீட்டை கணக்கிடும் வழிகளில் ஒன்று.

ஆனால் இந்த கணக்கீட்டு முறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் (ஃபார்முலா) ஒன்றுமில்லை.

ஆப்ரிக்க ஆணையம் ஒன்று 1997ல், "மேலை நாடுகள்" 777 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் தரவேண்டும் என்று கோரியது. இது அப்போதைய அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 70 மடங்கு பெரியது.

ஆனால் இந்தத் தொகையை, மிகவும் அதிதீவிர நஷ்ட ஈட்டுக் கோரிக்கையாளர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இது உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இப்போது, கேரிகாம் ஆணையம் இந்த இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்கவில்லை.

மாறாக, அது கரீபியன் நாடுகள் வைத்திருக்கும் கடனைத் தள்ளுபடி செய்யலாம் என்று கூறுகிறது. இது மட்டுமல்லாமல், அந்த நாடுகளின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு நிதி வழங்கலாம் என்றும் அது கோருகிறது.

இது யூத இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக, இஸ்ரேலுக்கு மேற்கு ஜெர்மனி கொடுத்த இழப்பீடு போன்ற ஒரு முன்மாதிரியாகும்.

படத்தின் காப்புரிமை UN Photo Logan Abassi
Image caption அடிமை வர்த்தகத்துக்கு இழப்பீடாக ஆப்ரிக்க நாடுகளின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு நிதி உதவி கோரும் கேரிகாம் ஆணையம்

வெவ்வேறு தனிப்பட்ட நடவடிக்கைகள்

இதனிடையே, மற்ற குழுக்கள் வெவ்வேறு தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

உதாரணமாக, ரஸ்தஃபேரியன் நாடு (1930களில் ஜமைக்காவில் உருவான ஒரு ஆப்ரகாமிய மதப்பிரிவைப் பின்பற்றுபவர்கள்) என்ற அமைப்பு முன்னாள் அடிமை வர்த்தக நாடுகள் சுமார் அரை மிலியன் ரஸ்தஃபேரியன்களை மீண்டும் ஆப்ரிக்காவில் குடியேற்ற சுமார் 129 பிலியன் டாலர்கள் தரவேண்டும் என்று கூறுகிறது.

நியூசிலாந்து மாவோரி வம்சாவளி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சொத்து உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு பணம் தந்தது போன்றது இந்தக் கோரிக்கை.

கென்யாவில் 1950களில் மௌ மௌ கிளர்ச்சியின் போது பிரிட்டிஷ் அரசால் சித்ரவதை செய்யப்பட்டவர்கள் குறித்த வழக்கில் 2012ல் வந்த தீர்ப்பை அடுத்து பிரிட்டிஷ் அரசே ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் நஷ்ட ஈடு தர ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தைப் போன்றது என்று கூட சொல்லலாம்.

"இந்த வழிமுறையை ஒத்திப்போடுவது என்பது ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும் பாதகத்தைத்தான் ஏற்படுத்தும்", என்று கூறுகிறார் கறுப்பின சிறுபான்மையருக்காகப் பாடுபடும் "ஆப்பரேஷன் ப்ளாக் வோட்" என்ற அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் லெஸ்டர் ஹாலோவே.

இந்த நஷ்ட ஈடு வழங்குவதை இழுத்தடிப்பது, மேலும் இந்த இழப்பீட்டின் மதிப்பை அதிகப்படுத்தும் ஏனென்றால், பணவீக்கம், உணர்வு சார்ந்த மற்றும் தலைமுறைகளுக்கு ஏற்பட்ட சேதம் போன்றவைகளுக்கான "மதிப்பு" அந்த இழப்பீட்டுத் தொகையை உயர்த்தும் என்று ஹாலோவே கூறுகிறார்.

ஆனால் எந்த வகையில் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்ற விஷயம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் மத்தியிலேயே பிளவுகளை உண்டாக்குகிறது. பலர் ஆப்ரிக்க கரீபிய மக்கள் எல்லோரும் திரண்டு வழக்கு போடுவதற்கு வந்துவிடுவார்கள் என்ற ஐரோப்பிய அரசுகளின் நம்பிக்கை "அவமதிப்பதாக" கருதலாம்.

"சிலர் பணம் கோருகிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் சில நினைவு கூர்வது என்ற விஷயம்தான்" என்கிறார் பிரிட்டிஷ் அரசியல் ஆர்வலர் பேட்ரிக் வெர்னான்.

Image caption மேற்கிந்தியத் தீவுகளில் அடிமைகள் விற்கப்படுவதைக் காட்டும் ஒரு பழைய சுவரொட்டி

ஆனால், பணம் அல்லது இழப்பீடு விஷயத்தில் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முழுமையான மன்னிப்புக் கேட்கப்படுவதற்கு முன்னால் இந்தப் போராட்டம் கைவிடப்படாது என்பது தெளிவாகிறது.

அதுதான் குறைந்தபட்ச முதல் நடவடிக்கை என்று கூறுகிறார் எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழக விரிவுரையாளரும், இழப்பீடு விஷயங்களில் வல்லுநருமான, ஃபெர்ன் ப்ரென்னன்.

"அடிமையாக்கப்பட்ட வரலாறு ஆப்ரிக்க வம்சாவளி மக்களின் மீது இன்னும் ஒரு தாக்கத்தை செலுத்துகிறது என்பதை ஐ.நா மன்றமே அங்கீகரித்திருக்கிறது. இதில் கல்வி, வீட்டு வசதி மற்றும் கிரிமினல் நீதி போன்ற விஷயங்கள் தொடர்பில் ஒரு சமாந்திரமற்ற நிலை இருக்கிறது. இது ஒரு சிக்கலான விஷயம். ஆனால் கடந்த காலம் இன்றைய நிலை மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பது குறித்து ஒரு விதமான அங்கீகாரம் வேண்டும்" என்கிறார் அவர்.

பழங்காலக் கதை ?

ஆனால் இழப்பீடு வழங்க ஒரு தார்மீக காரணம் இருக்கிறது என்பதை அரசுகள் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த உடன்படுவார்களா என்பது சந்தேகம்தான்.

பிரிட்டன் மட்டுமல்ல. பிரான்சில், அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இது போன்ற இழப்பீடுகள் தருவது சாத்தியமே இல்லை ஏனென்றால் அடிமை வர்த்தகம் நடந்த வரலாறு என்பது சரி செய்ய முடியாத ஒன்று என்று கூறியிருக்கிறார்

இதே போலத்தான் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலும். அவைகள் இந்த அடிமை வர்த்தகத்தை நடத்திய முதல் சில நாடுகள்.

அமெரிக்காவில், இந்த இழப்பீடு விவகாரம் திரும்பத் திரும்ப எழுந்திருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்னிப்பு கோரியது. ஆனால் இழப்பீடு குறித்து ஒரு உடன்பாடும் இல்லை.

இந்த அடிமை வர்த்தகம் வெகு காலத்துக்கு முன்னர் நடந்தது என்பதுதான் இழப்பீடுக்கு எதிரான முக்கியமான வாதம். இந்த விஷயத்தில் ஒட்டு மொத்த பொறுப்புக்கூறல் என்ற உணர்வே இல்லை என்றும் வாதிடப்படுகிறது.

பல நூறாண்டுகளுக்கு முன்னர் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாடுகள் பொறுப்பு கூற வைக்கப்பட முடியுமா ? அப்படியென்றால், எவ்வளவு காலம் பின்னோக்கி செல்ல முடியும்?

"ரோமானியர்கள் எனது பிரிட்டிஷ் முன்னோர்களுக்கு செய்ததைப் பற்றியும், வைக்கிங்குகள் இங்கு வந்து சூறையாடி, கொள்ளையடித்தது பற்றியும் நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இதற்கு நாம் இத்தாலியர்களிடமும், டென்மார்க்கிடமும் எப்போது பல பிலியன் டாலர்கள் இழப்பீடு கோரப்போகிறோம்? காலவரையறைச் சட்டம் எப்போது முடிவு பெறும்? 200 ஆண்டுகள்? 500 ஆண்டுகள்? அல்லது 1,000 ஆண்டுகளா? அல்லது பிரபஞ்சம் தோன்றிய கணத்திலிருந்து நடந்த எல்லா விஷயங்களுக்கும் நாம் இழப்பீடு கோர முடியுமா?", என்று கேட்கிறார் 'டெலிகிராப்' பத்திரிகையில் எழுதும் கட்டுரையாளர் ஜூலியா ஹார்ட்லி.

படத்தின் காப்புரிமை Martin Dixon
Image caption ஆப்ரிக்க வம்சாவளியினருக்கான பத்தாண்டுகள் என்ற தசாப்த்தத்தை அறிவித்தது ஐநா. இது 2024 வரை நடக்கும்

பலனாளர்கள் யார் என்பது குறித்த வரைவிலக்கணம் மிகவும் சிக்கலானது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

யார் இழப்பீடு பெறவேண்டும், நவீன ஆப்ரிக்க நாடுகளா அல்லது பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாரிசுகளா?

அதே போல, தங்கள் நாட்டு மக்களையே விற்று பணம் சேர்த்த ஆப்ரிக்க வர்த்தகர்கள் பொறுப்புகூற வேண்டியதில்லையா என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.

ஒரு தத்துவார்த்தரீதியான நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், சிலர் இந்த இழப்பீடு கோரிக்கையே இனவாதம்தான் என்று சொல்லுமளவுக்குப் போகிறார்கள்.

"இது ஒருவகையில் தார்மீக காட்டுமிராண்டித்தனம். எனது நலன்கள் எனது சொந்த சுற்றத்தார் குழுவுடன் பிரிக்க முடியாதவகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. அது உனது குழு நலனுடன் நேரடியாகப் போட்டி போடுகிறது. அதாவது எந்த இனவாதத்தை அகற்ற இந்த திட்டம் கொள்கையளவில் எண்ணுகிறதோ அதையேதான் அது செய்கிறது" என்கிறார் "தெ அட்லாண்டிக்" இதழின் செய்தியாளர் கெவின் வில்லியம்சன்.

ஆனால் ஆர்வலர்கள் இந்த வாதத்தை மறுத்து, மனிதன் பிறப்பால் சுதந்திரமானவன் என்ற அடிப்படை இயற்கை சட்டத்தை இந்த அடிமை வர்த்தகம் பரவலாக மீறியதால், அது மற்றெல்லா இழப்பீட்டு வழக்குகளையும் விட தனித்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள்.

இது போன்ற ஒரு குற்றத்துக்கு இழப்பீடு தர கால வரயறைச் சட்டம் எதுவும் இருக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அரசுகள் மீது தரப்படும் அழுத்தம் குறையாது. ஐநா மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் 'ஆப்ரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச தசாப்தம்" என்பது இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அது 2024 வரை அமலில் இருக்கும். இந்த முன்முயற்சியில், இது போன்ற மன்னிப்புக் கோரல்களும் இழப்பீடு கோரிக்கைகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.