கைதிகளின் விடுதலையை கோரி வடக்கு, கிழக்கில் முழு-அடைப்பு

  • 13 நவம்பர் 2015
Image caption இன்று முழு-அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது

இலங்கையில் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இன்று முழு-அடைப்பு போராட்டம் நடந்துள்ளது. இதனால் அந்தப் பிரதேசங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தது.

தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் 'அரசியல்' கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முழு-அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

வடக்கு பிரதேசங்களில் பெரும்பாலும் முழு அளவில் அடைப்பு போராட்டம் நடந்துள்ளது. அடிப்படை சேவைகள் தவிர இயல்பு-நிலை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக எமது வட-இலங்கை செய்தியாளர் கூறுகின்றார்.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கிடையிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த கடையடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலை, ரயில்சேவை, தொலைவிடங்களுக்கான பேருந்து சேவைகள் என்பன நடைபெற்ற போதிலும் பாடசாலைகள் கல்வி நிலையங்கள் என்பன முழுமையாக முடங்கியிருந்தன.

சில இடங்களில் வங்கிகள் திறந்திருந்த போதிலும் மக்கள் வருகையில்லாத காரணத்தினாலும் நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்ததனாலும், வர்த்தக நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

அதிகாலை முதல் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்ற காய்கறிச் சந்தைகள் வெறிச்சோடி கிடந்தன.

தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துவதற்கு இந்தப் போராட்டத்தின் ஊடாகவே தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று தாங்கள் நம்புவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் கிழக்கு விஜயம் ரத்து

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் வழமை போல் வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. ஏனைய அலுவல்களில் வழமை நிலை காணப்படுகின்றது. தமிழ்ப் பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக எமது கிழக்கிலங்கை செய்தியாளர் கூறுகின்றார்.

இந்தப் போராட்டம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமும் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்பட்ட புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத் தொகுதி ஆகியவற்றை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று கிழக்கு மாகாணத்திற்கு செல்லவிருந்தார்.

இதனிடையே, இலங்கையில் உள்நாட்டு யுத்த காலத்தில் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஐநா குழுவினர் இன்று கிழக்கு மாகாணம் சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்களையும் இன்று மாலை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.