மால்டா காமன்வெல்த் உச்சி மாநாடு துவங்கியது

படத்தின் காப்புரிமை CHOGM Malta 2015
Image caption பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்

24-வது காமன்வெல்த் உச்சி மாநாடு மால்டாவில் துவங்கியுள்ளது.

பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

கடும்போக்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

பருவநிலை மாற்றம் தொடர்பான விடயங்களும் இம்முறை மாநாட்டில் பேசப்படவுள்ளன.

உலகின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் வாழ்கின்றனர்.

காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடு அல்லாத பிரான்ஸின் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்தும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

பாரிஸில் நடக்கவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு சில நாட்களே உள்ளநிலையில், புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் பற்றி பிரான்ஸுவா ஒல்லாந்த் இந்த மாநாட்டில் பேசுவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்புநாடுகளின் அரச தலைவர்கள் கூடும் இந்த மாநாடு, 2013-ம் ஆண்டில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.