ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஜெர்மனியில் மீண்டும் வெளியாகிறது

  • 1 ஜனவரி 2016
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் படத்தின் காப்புரிமை AFP Getty
Image caption ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல்

ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது.

இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது.

இப்போது அந்தப் பதிப்புரிமை காலாவதியாகியிருக்கிறது. மியூனிக்கில் இருக்கும் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கான்டம்பரரி ஹிஸ்ட்ரி இதன் புதிய பதிப்பை அடுத்த வாரம் வெளியிடவிருக்கிறது.

பல நாடுகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆய்வுக் குறிப்புகளுடன் வெளியிடப்படவிருக்கும் இந்த பதிப்பின் மூலம் இந்தப் புத்தகம் எப்படி மோசமாக, முன்னுக்குப் பின் முரணாக எழுதப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்படும்.

நாஜி காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஆய்வாளர்களுக்கு மெய்ன் காம்ஃப் உதவுவதாக வரலாற்றிசிரியர்கள் கருதுகின்றனர்.

படத்தின் காப்புரிமை PA
Image caption இந்த புத்தகம் நியோ நாஜி கருத்தாக்கத்தை ஊக்குவிக்கும் என்று அச்சம்

ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய பதிப்பை பல யூதக் குழுக்களும் வரவேற்றுள்ளன. இனப் படுகொலையை விளக்குவதற்கு அது உதவக்கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.

மெய்ன் காம்ஃப் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே 1925ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

1945 ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகு, இந்தப் புத்தகத்தின் காப்புரிமை பவேரியா மாகாணத்திற்கு வழங்கப்பட்டது.

இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தனர்.

ஜெர்மானியச் சட்டப்படி பதிப்புரிமை என்பது 70 ஆண்டுகளுக்கு நீடிக்கிறது.

இருந்தபோதும், நியோ - நாஜி உணர்வுகளை இந்தப் புத்தகம் தூண்டலாம் என்ற அச்சத்தின் காரணமாக, பொதுமக்களுக்கு இதன் பிரதி கிடைப்பது கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும் என ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.