உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

பணம் எங்கே?

உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர்

இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை.

பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை.

ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய்து வெளியிடுகிறது.

இதன் அடிப்படையில் உலகின் செல்வந்த மற்றும் ஏழை பகுதிகள் எவை? அவை எப்படி மாறுகின்றன?

இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளவில் செல்வம் எப்படி பரவியிருந்தது என்பதை, கிரெடிட் ஸ்விஸ்ஸின் தகவலின் அடிப்படையில் காட்டுகிறது.

Image caption உலகின் எந்தப் பகுதியில் செல்வம் குவிந்துள்ளது என்பது இப்படத்தில் மூலம் தெரிகிறது

உலகின் பெரும்பாலான செல்வம் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலேயே குவிந்துள்ளது.

மெக்ஸிகோ நீங்கலாக உள்ள வட அமெரிக்காவில் உள்ளவர்களின் சராசரி செல்வம் 342,000 டாலர் என அந்த வங்கி கணக்கிட்டுள்ளது.

மெக்ஸிகோவின் தரவுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செல்வம் எனக் கூறியுள்ளது, அவர்களிடம் உள்ள பொருட்கள், சேமிப்பு மற்றும் சொத்து ஆகியவற்றிலிருந்து இருக்கும் கடனை கழித்த பிறகு இருப்பதே அளவுகோலாக கருதப்படுகிறது.

அந்த மூன்று பகுதிகளில் இருக்கும் செல்வம் என்பது உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகமிக அதிகம்.

உதாரணமாக ஆப்ரிக்கா அல்லது இந்தியாவிலுள்ள ஒருவரின் சராசரி சொத்து மதிப்பைவிட அது 75 மடங்கு அதிகமானது.

அதேபோல் சீனா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இது 15 மடங்கு அதிகம்.

படத்தின் காப்புரிமை AP
Image caption லண்டனும் செல்வச் சீமான்கள் அதிகம் வாழும் இடமாகவுள்ளது

ஐரோப்பிய அளவுகோலை ஒப்பிடும்போது கூட, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ளவர்கள் 2.5 மடங்கு அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர்

எனினும் இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்க டாலரை அளவுகோலாகக் கொண்டு இந்த ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் வெவ்வேறு நாடுகளில் மக்களுக்கு இருக்கும் சமமான வாங்கும் சக்தி கணக்கில் எடுக்கப்படவில்லை.

இதனால் இருக்கும் செல்வத்துக்கும் வாழ்க்கைச் செலவினத்துக்குமான தொடர்பை உறுதியாக கணிக்கக்கூடிய வழிமுறைகள் இல்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்களிடம் அதிகமான அளவுக்கு டாலர்கள் இருக்கலாம், ஆனால் அதன்மூலம் அந்தப் பணத்தின் மூலம் வேறு நாடுகளில் கிடைக்கும் பொருட்களின் தரமோ அல்லது சேவைகளின் தரமோ கிடைக்கும் என்பதாகாது.

செல்வத்தில் வீடு அல்லது நிலம் என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு மாறுபடும். இதனால் ஏற்றத்தாழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் தெரியும்.

இப்படியான பல காரணங்களால், இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தெரிகிறது.

உலகில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீத மக்கள் எங்கு வாழ்கிறார்கள்?

1 அமெரிக்கா 20,680,000 (2014ஆம் ஆண்டை விட 15% அதிகம்

2 பிரிட்டன் 3,623,000(25% அதிகம்)

3 ஜப்பான் 3,417,000(15% குறைவு)

4 பிரான்ஸ் 2,762,000(22% குறைவு)

5 ஜெர்மனி 2,281,000(17% குறைவு)

6 சீனா 1,885,000(19% அதிகம்)

7 இத்தாலி 1,714,000(25% குறைவு)

8 கனடா 1,500,000(7% குறைவு)

9 ஆஸ்திரேலியா 1,480,000(17% குறைவு)

10 சுவிட்சர்லாந்து 831,000(3% அதிகம்)

இந்தப் புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது சீனா, வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிகிறது.

அதே நேரம் ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை afp
Image caption சீனா ஏராளமான பணக்காரர்களை உருவாக்கியுள்ளது

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் கூடுதலான பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது அல்லது பெரும் கோடீஸ்வரர்கள் லண்டன் அல்லது நியூயார்க்கில் தமது செல்வத்தை கொண்டு சென்று அதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.

எனினும் மனை விற்பனை சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் இதன் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

லண்டனில் கடன் இல்லாமல் நீங்கள் ஒரு வீட்டை வைத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் கிரெடிட் ஸ்விஸ் வங்கியின் கணக்கீட்டின்படி நிச்சயம் பெரும் பணக்காரர்தான்.