`பூச்சிகளும் வண்டுகளும் ஆபத்தில்'

  • 27 பிப்ரவரி 2016

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், மற்றும் ஏனைய பூச்சி வகைகளும் அதிக அச்சுறுத்தலை எதிர் கொள்வதால், உலகெங்கும் உள்ள உணவுப் பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock

குறிப்பாக, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க நாடுகளில் பல்வகை தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிவுப் பாதையில் உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுடுள்ளது.

ஹமிங் பறவைகள், வண்டுகள், மற்றும் வெளவால்களும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Andrew Bain

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் உள்ள பல்உயிரினங்கள் பற்றிய மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுவரும் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களின் ஆய்வின் முடிவாகவே, இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களில் ஒருவரான இங்கிலாந்தின் ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சைமன் பொட்ஸ், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள் தேனீக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியன,உணவு மற்றும் அவை வாழ ஏற்ற சூழலையும் இழந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம், மற்றும் பூச்சிகொல்லிகளும் கூட இவற்றிற்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் மற்றும் வண்டுகளினதும் அழிவு, எமக்கு மோசமான நிதி மற்றும் சுகாதார தாக்கங்களை உண்டுபண்ணும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Robert Pittman CC by 2.0

ஆண்டொன்றிற்கு 577 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான விளைச்சல் உற்பத்தியில் இவை நேரடியாக பங்களிப்பு செய்கின்றன.

மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகளும் பூச்சிகளும் பெருமளவில் இல்லாமல் போனால், முக்கியமான விளைச்சல்கள் சில இல்லாமல் போகும், அல்லது அதன் உற்பத்தி வீழ்ச்சியடையலாம் என்றும், பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

இவ்வாறு மனிதனுக்கு பல வழிகளில் பெரும் உதவியாக இருக்கும் இவ்வகையான பூச்சிகளையும் வண்டுகளையும் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு என தெரிவித்துள்ள அவர், இவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் களை மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவது சிறந்தது என்பதுடன், இதனை அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் உதவும் வகையில் நாம் வீட்டுத் தோட்டங்களில் பூச்செடிகளை நடலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.