மும்பையில் மீண்டும் நடன விடுதிகள்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடன விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கின்றன.

Image caption தடைக்கு முன்பாக மும்பை நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றிவந்தனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.

2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது.

நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மராட்டிய மாநிலத்தில் நடன விடுதிகளுக்கான உரிமம் வழங்கும் பணியை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்க வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் இந்த மாதத் துவக்கத்தில் கூறியிருந்தது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இந்த நடன விடுதிகளின் உள்ளே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், நடன விடுதிகளின் வாயில்களில் மட்டும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், இதற்கு தடை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

இந்த நடன விடுதிகள் செயல்பட துவங்கினால், பெண்கள் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தப்படுவார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அங்குள்ள நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களில் 72 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள் என்றும் நடனமாடுபவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், இப்பெண்களில் 68 சதவீதமானவர்கள் தமது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது.

மாநிலத்திலுள்ள உயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் முக்கிய 26 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நடன விடுதிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், விரைவில் புதிய நடன விடுதிகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.