சீன அரசு நினைவு கூராத கலாசார புரட்சியின் 50வது ஆண்டு

  • 16 மே 2016

சீனாவின் அண்மை வரலாற்றில் ஒரு கொடூரமான கட்டமாக கருதப்படும் அந்நாட்டின் கலாச்சார புரட்சி தொடங்கிய 50வது ஆண்டு நிறைவு எவ்வித அதிகாரபூர்வ நினைவு கூர்தலும் கடைப்பிடிக்கபடாமல் அமைதியாக கடந்துள்ளது.

Image caption மாசேதுங்

1966-ஆம் ஆண்டில், சீன அரசு, சீனாவை எதிர்ப்புரட்சி திசையில் இட்டுச்செல்கிறது என்று கருதி, கம்யூனிசக் கட்சியின் தலைவர் மாசேதுங் சீன அரசின் மீதான தனது அதிகாரத்தை மீண்டும் உறுதிபடுத்த முனைந்தார்.

சீன புரட்சியின் தூய்மையான சாராம்சத்தைப் புதுப்பிக்கவும், பழமையான எண்ணங்கள் மற்றும் கலாசாரம் என்று கருதப்பட்ட விஷயங்களைப் புறந்தள்ளவும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அக்காலகட்டத்தில் மா சேதுங் அறைகூவல் விடுத்தார்.

இதனால் ஏற்பட்ட அதீத வன்முறை மற்றும் குழப்பத்தால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல லட்சம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

நாட்டுக்கும், மக்களுக்கும் பேரழிவு உண்டாக்கிய கலாச்சார புரட்சியை கொண்டு வந்தது மிகவும் மோசமான பிழையென்று 1981-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக கருத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.