விமான விபத்து: யூகங்களின் அடிப்படையில் பதில் கூற ஈஜிப்ட் ஏர் மறுப்பு

  • 24 மே 2016

கடந்த வாரம் மத்திய தரை கடல் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தபோது ஈஜிப்ட் ஏர் எம்எஸ் 804 என்ற எகிப்து விமானம் விபத்துள்ளானது எதனால் என்பதை தாங்கள் யூகிக்க மாட்டோம் என்று ஈஜிப்ட் ஏர் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஈஜிப்ட் ஏர் விமானம் (கோப்பு படம்)

இதுவரை பெறப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் உடல்களின் எஞ்சிய பாகங்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதால், இந்த விமானம் வெடித்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருவது சரியாக இருக்கும் என்று தடயவியல் குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் யூகம் வெளிப்படுத்தியதையடுத்து, மேற்கூறிய கருத்தினை ஈஜிப்ட் ஏர் விமான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

வெடி பொருட்களின் தடயங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த வியாழன் அதிகாலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளான போது, விமானத்தில் இருந்த 63 பேரும் கொல்லப்பட்டனர்.