ஸ்விஸ்: முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியருடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும்

  • 25 மே 2016
வகுப்பு துவங்கும்போதும் முடிவிலும் கைகுலுக்குவது ஸ்விட்சர்லாந்தில் வழக்கம்
Image caption வகுப்பு துவங்கும்போதும் முடிவிலும் கைகுலுக்குவது ஸ்விட்சர்லாந்தில் வழக்கம்

ஸ்விட்சர்லாந்தின் வடக்கே இருக்கும் பேசல் உள்ளூராட்சியிலுள்ள பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று அந்த ஊரின் உள்ளூராட்சி அதிகார சபை தீர்ப்பளித்திருக்கிறது.

சிரியாவிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மதக்காரணங்களைக் காட்டி பெண் ஆசிரியைகளுடன் கைகுலுக்கத் தேவையில்லை என்று அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்கிறது.

மதம் சார்ந்த பழக்கவழக்கங்களைவிட பொதுநன்மையும் பெண் சமத்துவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உள்ளூராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த ஊர் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் கைகுலுக்குவது பொதுவான நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.

அந்த நடைமுறையிலிருந்து இந்த இரண்டு முஸ்லிம் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு அந்த ஊரில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பள்ளி மாணவர்களின் பெற்றோர் கைகுலுக்க மறுத்தால் 5000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்க வழியிருப்பது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.