கானாவின் 'சட்டவிரோத' தங்கவேட்டை நாட்டை பாதிக்குமா?

கானாவின் 'சட்டவிரோத' தங்கவேட்டை நாட்டை பாதிக்குமா?

கானாவில் ஒரு தங்க வேட்டை நடந்துகொண்டிருக்கிறது.

புதிய தங்கச் சுரங்கங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் தங்கச் சுரங்கங்களே இலக்கு வைக்கப்படுகின்றன.

கடந்த சிலவாரங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட கானாவின் முக்கிய தங்கச் சுரங்கங்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரித்துவரும் சட்டவிரோத தங்கச்சுரங்க நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று அச்சங்கள் எழுந்துள்ளன.

தங்கத்துக்குப் பேர்போன மேற்கு ஆப்ரிக்காவில், ஆங்லோகோல்ட் அஷாந்தி என்கிற பன்னாட்டுப் பெருவர்த்தக தங்க நிறுவனம் பெரிய அளவில் சுரங்கங்களை வைத்திருக்கிறது.

அந்த சுரங்கங்கள் நஷ்டமடைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் ஆட்கள் பணிநீக்கப்பட பாதிக்கப்பட்டவர்கள் தெருவுக்கு வந்து வேலை கேட்டு போராடினர்.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரியில் சுரங்கங்களின் வேலைகளை உடைத்துக்கொண்டு கும்பல்கள் சுரங்கங்களுக்குள் நுழைந்தனர். ஒரு பணியாள் கொல்லப்பட்டார். மதிப்புமிக்க சுரங்கங்களுக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் நுழைந்துவிட்டனர். மூன்றுமாதங்கள் முடிந்த பின்னும் அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள். கானாவின் அதிக வளம் மிக்க தங்கத்தை சுரங்கத்தில் இருந்து சுரண்டியபடி.

இவர்களுக்குத் தப்பி எஞ்சிய மிகச்சில பாதுகாப்பான சுரங்கங்களில் உள்ள நிறுவன மேலாளர் இவர்கள் வெளியேறாதவரை தங்கம் தோண்டும் தொழில் மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்கிறார்.

“இந்த ஒபுவாசி சுரங்கத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற முடியுமென்றே இன்னமும் நம்புகிறோம். ஆனால் எங்களுடைய சுரங்க எல்லைக்குள் வன்முறையாக அத்துமீறி நுழைந்திருப்பவர்களின் சட்டவிரோத சுரங்கப்பணிகள் அதை செய்யவிடாமல் தடுக்கின்றன. அரசாங்கம் எங்களுடன் இணைந்து இந்த சுரங்கத்தை மீண்டும் செயற்படச் செய்ய உதவ வேண்டும்”, என்கிறார் ஆங்லோகோல்ட் அஷாந்தி நிறுவன அதிகாரியான எரிக் அசுபோண்டெங்.

முன்பு கானாவிலேயே செல்வம் மிக்க நகரமாக ஒபுவாசி நகரம் இருந்தது. ஆனால் இன்று உள்ளூர் பொருளாதாரம் முற்றாக படுத்துவிட்டது. சட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டவர்கள் மீது உள்ளூர் மேயருக்கு அனுதாபம் இருக்கிறது.

இந்த சிக்கலைத்தீர்க்க அரசு தலையிடுவதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ஒபுவாசியில் நடக்கும் ஒரே தங்கம் தோண்டும் பணி என்பது உள்ளூர் ஆண்கள் வீட்டையொட்டிய குழிகளில் கைகளால் சுரண்டும் தங்கம் மட்டுமே.