உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக ஆய்வு

  • 31 மே 2016
படத்தின் காப்புரிமை AP

ஆஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஆசியாவில் மட்டும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திக்கப்பட்டு தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ வாழ்ந்து வருவதாக தி வாக் ஃப்ரீ பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மேலும், இந்த குறியீட்டின்படி, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையாக, சுமார் 18 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அடிமைத் தொழிலாளிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.

அதே சமயம், சதவீத அளவில் பார்த்தால், வட கொரியாவில் அதிக சதவீத மக்கள் வேலைகளில் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இருபதில் ஒருவர் அடிமைத் தொழிலாளியாக வாழ்வதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

சிலர் இந்த குழுவின் ஆராய்ச்சி முறையை விமர்சித்துள்ளார்கள்.

ஆனால், இந்த அறிக்கையை தயாரித்தவர்களோ, இந்த ஆண்டு அறிக்கையை தொகுக்க தகவல்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், உலகம் முழுக்க 42,000 பேரை நேர்காணல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.