ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மனைவியை அடிப்பது: பாகிஸ்தான் மதக்குழுவுக்கு எதிராக சீறும் சமூக ஊடகங்கள்

கணவர்கள் தமது மனைவிகளை லேசாக அடிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்த இஸ்லாமிய மத ஆலோசகர்களை பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் கண்டித்திருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றம் கொண்டுவந்த வன்முறைக்கு எதிராக பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் சட்டம் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை, உளவியல் சித்திரவதை, பொருளாதார ஒடுக்குமுறை உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை வரையறுத்தது.

ஆனால் இந்த சட்டம் இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் இதை நிராகரித்தது. இதன் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாது. இந்த சட்டத்திற்கு மாற்றாக தான் உருவாக்கிய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை இஸ்லாமிய கவுன்சில் வெளியிட்டது.

கணவர்கள் தமது மனைவிகளை லேசாக அடிக்கலாம் என்று அது பரிந்துரைத்தது. மேலும் பெண் செவிலியர் ஆண் நோயாளிகளுக்கு பணிவிடை செய்யக்கூடாது; கர்ப்பம் தரித்து 120 நாட்களுக்குப்பின் செய்யும் கருக்கலைப்பு என்பது கொலையே என்றும் இவர்கள் பரிந்துரைகள் தெரிவித்தன.

இந்த பரிந்துரைகள் பாகிஸ்தானில் கோபத்தை தோற்றுவித்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கவுன்சில் கலைக்கப்படவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

“ பாகிஸ்தானில் இருக்கும் எந்த பெண்ணும் நியாயமான எந்த ஆணும் இதை ஏற்கமாட்டார்கள். முதலாவதாக இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் தனக்கு சட்டம் அளித்த உரிமை மற்றும் எல்லையை மீறியிருக்கிறது. இந்த கவுன்சிலை கலைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”, என்கிறார் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் தாஹிரா அப்துல்லா.

இஸ்லாமிய கவுன்சிலின் பரிந்துரையை பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்றாக வேண்டிய சட்டரீதியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அரசு விரும்பினால் இவற்றை புறந்தள்ளலாம். கடந்தகாலத்தில் பாகிஸ்தான் அரசு அப்படி செய்தும் இருக்கிறது.