ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனின் மோசமான சிறார் துஷ்பிரயோகிக்கு ஆயுள் தண்டனை

  • 2 ஜூன் 2016

பிரிட்டனின் மிக மோசமான சிறார் துஷ்பிரயோகிகளில் ஒருவனாக கருதப்படும் 30 வயது ஆண் மலேஷியாவில் தொடர்ந்து செய்த சிறார் துஷ்பிரயோக குற்றங்களுக்காக ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறான்.

இங்கிலாந்தின் தென் கிழக்கின் கெண்ட் பிரதேசத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹக்கிள் தன் மீதான எழுபது குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கிறான்.

தன்னால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் படங்களையும் காணொளிகளையும் ரகசிய இணைய பக்கங்களில் பதிவேற்றியிருந்தான்.

ரிச்சர்ட் ஹக்கிள் கோலாலம்பூரின் வறிய பகுதிகளில் இருந்த குழந்தைகளைத் தேடிச்சென்றான்.

அவர்களை வெளியில் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றான். சாப்பிட வாங்கிக்கொடுத்தான். அவர்களின் நம்பிக்கையை பெற்றான்.

மிகவும் பலவீனமானவர்களை அவன் குறிவைத்தான். ஞாயிறு பள்ளி ஆசிரியன் என்கிற போர்வையில் அவர்களை நெருங்கினான்.

ஆங்கில மொழி ஆசிரியனாக பயிற்சி பெற்றவன் அவன்.

பிரிட்டிஷ் கவுன்சிலுக்கான 2008 ஆம் ஆண்டைய விளம்பர படத்தில் அவன் இடம்பிடித்திருந்தான்.

தொண்டு நிறுவனங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும் சென்றான். உதவி செய்யும் போர்வையில் குழந்தைகளை இலக்கு வைத்தான்.

எல்லாவற்றிலும் ஒரு தெளிவான போக்கு உருவானது. குழந்தைகளுடன் சுற்றிப்பார்க்கச் செல்வது, கையில் கேமெராவுடன். குழந்தைகள் இவனை அங்கிள் என்றழைத்தனர். ஆனால் இதெல்லாமே பாலியல் வல்லுறவிலும் துஷ்பிரயோகத்திலுமே முடிந்தன.

எல்லாமே படம்பிடிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான படங்களாக காணொளிகளாக. அனைத்தையும் ரகசிய இணையம் என்றழைக்கப்படுவதில் இயங்கும் குழுக்களில் பகிர்ந்தான்.

இறுதியாக ஆஸ்திரேலிய காவல்துறை இவனை அடையாளம் கண்டது. ரகசிய இணையத்தில் இயங்கும் பாலியல் குற்றவாளிகள் தொடர்பான மிகப்பெரிய புலனாய்வில் இவன் பிடிபட்டான்.

முன்னாள் பிரிட்டிஷ் புலனாய்வாளரான பால் கிரிபித்ஸ் தற்போது குயின்ஸ்லாண்டில் பணிபுரிகிறார். இந்த புலனாய்வில் முக்கிய பங்குவகித்தவர் அவர்.

"இவன் கைது செய்யப்படாமல் விடுபட்டிருந்தால், இவன் செயற்பாடுகள் தடுக்கப்படாமல் விட்டிருந்தால் தொடர்ந்தும் குற்றங்கள் செய்துகொண்டிருப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு நபராகவே இவன் எனக்குத் தெரிகிறான். குழந்தைக்கு எதிரான குற்றம் புரிய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவன் அதை பயன்படுத்திக்கொள்வான்", என்கிறார் பால் கிரிபித்ஸ்.

ஹக்கிளால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் மன உளைச்சலோடு விடப்பட்டிருக்கிறார்கள். உதவிக்கு வந்ததாக சொன்னவனால் சிதைக்கப்பட்டவர்கள் இவர்கள். தனது நம்பிக்கையை பயன்படுத்தி நெருங்கியவன் இறுதியில் செய்தது நம்பிக்கை துரோகம்.