வெள்ளத்தில் மிதக்கும் பாரிஸ் நகரம்

  • 3 ஜூன் 2016

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செயின் நதியின் கரைகள் பல இடங்களில் உடைந்த நிலையில், நகருக்குள் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை
Image caption பாரிஸ் நகரில் படகு வீட்டிலிருந்து மீட்கப்படும் முதியவர்

கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், செயின் நதியின் உயரம் சராசரி உயரத்தை (19 அடி) விட, 6 மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் நகரில் உள்ள பல சாலைகள், பாலங்கள் மற்றும் நகர ரயில் நிலையங்களை பாரிஸ் நகர கவுன்சில் மூடியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற லுவ்ர் மற்றும் ஆர்ஸே அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுவிட்டன. தரைத்தளத்தில் இருக்கும் விலை மதிப்பற்ற பல ஓவியங்களை மேல் தளங்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செயின் நதிக்கரையை ஒட்டி, அதிகாரிகள் தடுப்பு வேலிகளை அமைத்திருக்கிறார்கள். புறநகர் பகுதி ஒன்றிலிருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். பாரிஸ் மற்றும் மத்திய ஃபிரான்ஸில், 25 ஆயிரம் பேர் மின்சார வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 1910-ல் ஜூவாவ் சிலையின் தோள்பட்டை அளவுக்கு உயர்ந்த வெள்ளத்தின் தற்போதைய நிலவரம்.

நகர மையத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் மீட்கக்பபட்டுள்ளனர். செயின் நதியின் கிளை நதியான லுவாங் நதி, 1910-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்துக்குப் பிறகு மீண்டும் ஓர் அபாயகரமான உயரத்தை எட்டியுள்ளது.

ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பெய்யும் கனமழையால், இதுவரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, தென் ஜெர்மனி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸில் இருந்து யுக்ரைன் வரை, மத்திய ஐரோப்பாவில் இந்த வார இறுதியில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு கூறுகிறது. சில பிராந்தியங்களில், சில மணி நேரங்களில் 50 மி.மீ மழை பெ்யும் என்று கூறப்படுகிறது.