'அதியுயர் பிரதிநிதிகள் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார் ஹிலாரி கிளிண்டன்'

  • 7 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தஸ்தைப் பெறத் தேவைப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஹிலாரி கிளிண்டன் பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி ஹிலாரி கிளிண்டன் இந்த பெரும்பான்மையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொண்ட அதி உயர் பிரதிநிதிகளில் ( அதாவது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மேலும் பலர் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், கட்சியின் பெரும்பான்மை பிரநிதிகளின் ஆதரவை ஹிலாரி பெற்றுவிட்டார்.

இந்த செய்தி, செவ்வாய் அன்று கலிஃபோர்னியா உட்பட 6 மாகாணங்களில் ப்ரைமரி தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் வெளியானது.

இதுகுறித்து, லாங் பீச் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஹிலாரி கிளிண்டன், இது ஒரு முக்கிய மைல் கல், ஆனால், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

அதி உயர் பிரதிநிதிகளின் ஆதரவு வாக்குகளை தற்போதைய கட்டத்தில் சேர்த்திருப்பது தவறு என ஹிலாரியை எதிர்த்து களத்தில் இருக்கும் பெர்னி சாண்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.