எரித்திரியாவில் மனித நேயத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட குற்றங்கள்: ஐநா விசாரணை ஆணையம்

  • 8 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AFP

எரித்திரியா சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் ஆன நிலையில், அங்கு மனித நேயத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட குற்றங்கள் பரவலாக இழைக்கப்பட்டுவருவதாக, ஐநா விசாரணை ஆணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

சித்தரவதை, பாலியல் வல்லுறவு, கொலை, கடத்தல் மற்றும் அடிமைப்படுத்துதல் என பல அத்துமீறல்கள் அங்கு நடைபெற்று வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யுமாறும் அது ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த குற்றங்களுக்கு நாட்டின் உயரிய பதவியில் உள்ள அதிகாரிகள் பொறுப்பாக இருப்பதாக்க் கூறப்படுகிறது.

இந்த கருத்துக்களை எரித்திரியா அரசு, அரசியல் நோக்கம் கொண்டது, ஒரு தலை பட்சமானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது எனக் கூறி ஏற்க மறுத்துள்ளது.