அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது அரசியலில் பெண்களுக்கு ஒரு மைல் கல்: ஹிலாரி

  • 8 ஜூன் 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் பெண் ஹிலாரி கிளிண்டன்

புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார்.

நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.

தனது போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸின் பரப்புரை குறித்து பாராட்டு தெரிவித்த ஹில்லாரி, அவர் அரசியல் விவாதத்தின் அளவினை உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களையும் வாழ்த்தியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹில்லாரி மற்றும் பெர்னி ஆகியோரின் எழுச்சியூட்டும் பிரச்சாரங்கள் ஜனநாயக கட்சியினை வலுவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனிடையே கலிபோர்னியாவில் பேரணி ஒன்றில் பேசிய பெர்னி சேண்டர்ஸ், தான் அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறவுள்ள இறுதி பிரைமரி தேர்தலிலும், ஒவ்வொரு வாக்குக்கும், ஒவ்வொரு பிரதிநிதியின் ஆதரவுக்கும் போராடப் போவதாகத் தெரிவித்தார்.