ஒரு குரங்கினால் கென்யாவில் மின்சாரம் துண்டிப்பு

கென்யாவில் குரங்கு ஒன்று முக்கியமான மின்மாற்றி மீது விழுந்ததால், நாடு முழுவதும் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Image caption அட்டகாசம் செய்த குரங்கு என்று கென்ஜென் வெளியிட்டுள்ள படம்

கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின் மாற்றி மீது குரங்கு ஒன்று விழுந்தது. இதனால், அந்த மின்மாற்றி செயலிழந்தது. இதையடுத்து 180 மெகா வாட் அளவிலான மின்சாரத்தை விநியோகிப்பது தடைபட்டதாக மின்சார நிறுவனமான கென்ஜென் தெரிவித்திருக்கிறது.

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் துவங்கியது.

"கென்ஜென் மின் நிலையங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்களுடைய எல்லா மின் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என கென்ஜென் தெரிவித்திருக்கிறது.

செவ்வாயன்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாக கென்யாவின் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குக் காரணமான குரங்கு பிழைத்துக்கொண்டுவிட்டது. கென்யா வைல்ட் லைஃப் சேவை மையத்திற்கு அந்தக் குரங்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.