வட அயர்லாந்தில் அரசு அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டு மக்களை கொன்றதாக அறிக்கை வெளியீடு

  • 9 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

வட அயர்லாந்தில், போலீஸ் மீதான புகார்களை விசாரிக்கும் கண்காணிக்கும் அமைப்பானது, 20 ஆண்டுகளுக்கு முன் ஆறு கத்தோலிக்கரர்களை கொன்ற விசுவாச ஆயுததாரிகள் மற்றும் சில அதிகாரிகள் இடையே கூட்டு சதி இருந்துள்ளதாக அறிக்கை ஒன்றை தந்துள்ளது.

லோகினைலாண்டில் உள்ள ஒரு கிராமத்தில், ஹைட்ஸ் பார் என்ற மதுபான விடுதியில் நுழைந்த ப்ரோட்டஸ்ட்ண்ட் பிரிவைச் சேர்ந்த ஆயுததாரிகள், அங்கு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த இந்தக் கத்தோலிக்கப்பிரிவினரை சுட்டனர்.

போலீஸ் மீதான புகார்களை விசாரிக்கும் அமைப்பின் அதிகாரி ஒருவர், இந்த தாக்குதல் சம்பவத்தில் போலிசுக்குத் தகவல்தருபவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்த நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மோசமான தவறுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட அயர்லாந்து போலீஸின் தலைமை அதிகாரி, இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த அயர்லாந்தைக் கோரும் கத்தோலிக்க ஐரிஷ் தேசியவாதிகளுக்கும், அதற்கு உடன்படாத ப்ரோடெஸ்டன்ட் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடையே 30 ஆண்டுகள் ஆயுத மோதல் நடைபெற்றது.

அந்த கால கட்டத்தில், அரசின் கூட்டுச் சதி காரணமாக சுமார் ஏறக்குறைய 4,000 கொலைகள் நடந்திருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.