மரியா ஷெரபோவாவிற்கு தங்களின் ஆதரவு தொடரும்: பிரபல விளையாட்டு நிறுவனங்கள்

  • 9 ஜூன் 2016

ஊக்கமருந்து சோதனையில் தோற்றதால் இரண்டு வருடங்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட போதிலும் ரஷிய டென்னிஸ் விராங்கனை மரியா ஷெரபோவாவிற்கு தொடர்ந்து ஆதரவு தரப்போவதாக இரண்டு முக்கிய விளையாட்டு நிறுவனங்களான நைக் மற்றும் ஹெட் அறிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AP

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இந்த முடிவை குறைபாடுகளை கொண்ட செயல்முறைகளை சார்ந்து எடுத்ததாக ஹெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷெரபோவா இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஊக்க மருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்னும் மருந்தை உட்கொண்டதாக தெரியவந்த நிலையில் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற வித்திடும் இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருக்கிறார் மரியா ஷெரபோவா.

முன்னதாக, ஷெரபோவா நெடுங்காலமாக உட்கொண்ட மெல்டொனியம் என்னும் மருந்து, ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் அவர் ஊக்க மருந்து பயன் படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சில காலங்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்டுவிட்டது என்பதை தான் உணரவில்லை என்று தெரிவித்திருந்தார்.