யூரோ 2016 கால்பந்து இன்று தொடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • 10 ஜூன் 2016

இன்று பாரிஸில், யூரோ 2016 கால்பந்து போட்டியின் முதல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அந்நகரில் முன்னெப்போதும் காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பாரிஸின் துணைமேயர் ஷான் பிரான்சுவா மார்த்தின் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

பிபிசியிடம் பேசிய மார்த்தின் , போலிசாரின் எண்ணிக்கையையும், உளவு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஈஃபில் கோபுரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள கால்பந்து ரசிகர்களுக்கான பகுதியில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போன்று செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று பின்னதாக ஸ்டேட் தெ ப்ரான்ஸில் ( பிரான்ஸ் ஸ்டேடியம்) நடக்கவுள்ள போட்டியில், பிரான்ஸ் அணி , ரொமேனியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதே விளையாட்டரங்கில்தான் கடந்த ஆண்டு மூன்று இஸ்லாமியவாத தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான ஏற்பாடுகள் பரவலான தொழிலாளர் வேலை நிறுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு சீர்த்திருத்தங்கள் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக இந்த வேலை நிறுத்தங்கள் நடந்து வருகின்றன.

10 பிரெஞ்சு நகரங்களில் நடக்கவுள்ள இந்த ஒரு மாத கால போட்டிகளைக் காண, 7 மிலியன் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.