ஹிட்லரின் 'மையின் கேம்ஃப்' புத்தக சர்ச்சை: இத்தாலியப் பத்திரிகைக்கு கண்டனம்

இத்தாலிய பத்திரிகை ஒன்று வாசகர்களுக்கு ஹிட்லரின் 'மையின் கேம்ப்' புத்தகத்தின் இலவசப் பிரதிகளை தருவதற்கு இத்தாலி மற்றும் இஸ்ரேலின் முன்னணி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மிலான் நகரிலிருந்து வெளிவரும் பெர்லுஸ்கோனி குடும்பத்திற்கு சொந்தமான இந்த வலது சாரி பத்திரிகையான- 'ஈல் ஜோநாளே', (Il Giornale), யூதப் படுகொலைகளைத் தொடக்கி வைத்த தீமையின் ஆரம்பத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவவே இந்த இலவச விநியோக முயற்சி திட்டமிடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

ஆனால் இத்தாலிய பிரதமர் மட்டேயோ ரென்ட்சி இது ஒழுக்கமில்லாத செயல் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ராஜிய அதிகாரிகள் தாங்கள் இனப்படுகொலை பற்றிய புரிதலை ஏற்படுத்த மேலும் பொருத்தமான புத்தகங்களை கொடுத்து உதவ முடிந்திருக்கும் என்று தெரிவித்தனர்.