உலகம் சுற்றும் கோழி 'மோனிக்'கும், அதன் உற்ற நண்பன் கைரக்கும்

தோழமை மற்றும் சக-சார்புத்தன்மை ஆகியவற்றின் சிறந்த உதாரணம் இந்த கதை.

படத்தின் காப்புரிமை Guirec saudee
Image caption வேட்டையாடிய மீனுடன் , கைரக் மற்றும் மோனிக்

வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றை கடந்து இரண்டு ஆண்டுகள் கடலில் பயணித்த கடலோடிகளிடையே ஒரு நெருக்கமான உறவு ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவர் 24 வயது ஆண். மற்றொருவர் யார்? வியப்படைய வேண்டாம்; அந்த மற்றொருவர் மனிதரல்ல, ஒரு பெட்டைக் கோழி.

24 வயதாகும் கைரக் சவூதி, படகை செலுத்துவது உள்பட கடினமான பணிகளை மேற்கொள்வார்.

மோனிக் என்ற அந்த கோழி, பெரும்பாலான நேரம் கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலின் அழகை ரசித்தபடி இருக்கும். அவ்வப்போது முட்டையிடும்.

மோனிக் மற்றும் கைரக் ஆகிய இருவரின் அசாதாரண சாகச பயணம் குறித்து பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் மிகவும் ஆர்வமாக கவனம் செலுத்தி வருவதால், கடந்த சில மாதங்களில் இவர்கள் இருவரையும் குறித்த செய்திகளை வலைதளங்களில் பலரும் உன்னிப்பாக படித்து வருகின்றனர்.

பிரான்ஸில் உள்ள பிரிட்டானியை சேர்ந்த கைரக், மோனிக்குடனான தனது உலக சுற்றுப்பயணத்தை, மே 2014-இல் துவக்கினார்.

படத்தின் காப்புரிமை
Image caption ஆனந்த குளியல் போடும் கைரக் மற்றும் மோனிக்

ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகேயுள்ள ஸ்பானிஷ் பிராந்தியமான கேனரி தீவுகளில், தங்களின் பயணத்தை ஆரம்பித்த இந்த இணை கரீபியன் கடல் பகுதியில் உள்ள செயிண்ட் பார்ட்ஸுக்கு பயணம் மேற்கொண்டனர். பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆர்டிக் கடல் பகுதியில் பயணம் மேற்கொண்டனர்.

''அவளை பார்த்தவுடன் எனது உற்ற தோழியாக விளங்குவாள் என்ற உணர்வே ஏற்பட்டது'' என்று மோனிக்கை முதலில் சந்தித்தது குறித்து மேற்கு கிரீன்லாந்தில் தற்போது தங்கியுள்ள கைரக் பிபிசியிடம் தெரிவித்தார்.

''மோனிக் அப்போது நான்கு அல்லது ஐந்து மாத குழந்தையாக இருந்தது. மேலும், கேனரி தீவுகளை விட்டு அது சென்றதில்லை. நான் ஸ்பானிய மொழி பேசுவதில்லை. அதுவும் பிரஞ்சு மொழி பேசுவதில்லை. ஆனாலும், எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது'' என்று கைரக் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Guirec Saudee
Image caption மோனிக்கை நேசத்துடன் அணைத்து கொள்ளும் கைரக்

தனக்கு துணையாக ஒரு செல்லப்பிராணியை வளர்க்க கைரக் எண்ணியிருந்தாலும், கோழியை துணையாக வளர்ப்பது அவரது ஆரம்ப திட்டத்தில் இல்லை.

பூனை ஒன்றை வளர்ப்பதை பற்றி ஆரம்பத்தில் சிந்தித்தேன். ஆனால், அதற்கு அதிகப்படியான முயற்சி தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுத்தேன்,'' என்று கைரக் தன் எண்ணங்களை விவரித்தார்.

''கோழி வளர்ப்பு ஒரு சரியான தேர்வாக அமைந்தது. அதனை கவனித்து கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படவில்லை. கடலில் பயணம் செய்யும் போதும் அது முட்டையிடுகிறது.''

கடல் பயணத்தின் போது, கோழி மனசோர்வடைந்து விடும் என்றும், கடல் பயணத்தின் போது முட்டையிடாது என்றும் சிலர் கூறினார்கள்.

ஆனால், அப்படி எந்த பிரச்சினையும் வரவில்லை. மோனிக் உடனடியாக முட்டையிட்டுவிட்டது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிக விரைவாக தன்னை சரி செய்து கொண்டது.

சராசரியாக ஒரு வாரத்திற்கு ஆறு முட்டைகளை மோனிக் இடும். கிரீன்லாந்தில் கடும் குளிர் காலநிலை நிலவிய போதும், அங்கு மூன்று மாதங்கள் சூரிய ஒளி படாத இடத்தில் இருந்த போதும், மோனிக் முட்டையிடுவது குறையவில்லை.

கிரீன்லாந்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் மோனிக்கின் இருப்பை ஆர்வத்தோடு உற்று நோக்கியதாக தெரிவித்த கைரக், அங்கு கோழி வளர்ப்பு பண்ணை எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஆர்வத்தை தன்னால்புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார்.

கைரக் வளர்ந்த தீவின் பெயர் வினேக். அந்த பெயரையே கொண்டுள்ள 11.8 மீட்டர் நீளமுள்ள (39 அடி) படகில், மோனிக்கின் வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Guirec Soudee
Image caption கப்பல் தளத்தில் மோனிக்குடன் கைரக்

கப்பலின் மேல் தளத்தில் உலாவ மோனிக்குக்கு முழு உரிமை இருந்தாலும், கால நிலை மோசமடையும் போது, மோனிக்கை அதன் கூண்டில் அடைப்பதை, கைரக் உறுதி செய்வார்.

''ஆரம்பத்தில், பெரிய அலைகள் எழும் போது மோனிக் இடறி விழுந்து விடும் என்று கவலைப்படுவேன்.

ஒரு வினாடி கப்பலில் இருந்து மோனிக் கீழே விழுந்து விடும் என்பது போல் தோன்றும். ஆனால், எப்போதும் நன்றாக கால் ஊன்றி நிலைமையை சமாளித்து விடும். மோனிக்கின் தைரியம் அசாத்தியமானது.

படத்தின் காப்புரிமை Guirec Soudee
Image caption மோனிக் கோழி

ஆனால், தற்போது மோசமான காற்று வீசும் போது, நான் மிகவும் கவனமாக இருந்து மோனிக்கை கப்பலுக்குள் அனுப்பிவிடுவேன்.

தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் என்பது குறித்து கைரக் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கனடாவில் சுங்க அதிகாரிகளை எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை தவிர, மோனிக் மற்றும் கைரக்கின் நட்பு வேறெந்த இடரையும் சந்திக்கவில்லை. ஆனால், அடுத்த முறை மிகவும் இலகுவாக அமைந்து விடாது என்பதனை கைரக் ஒப்புக் கொள்கிறார்.

மோனிக் மற்றும் தனக்கு இடையேயான உறவு உடையும் நிலை ஏற்படும் என்ற அச்சம் கைரக்குக்கு ஏற்படாமல் இல்லை. இது குறித்து அவர் கூறுகையில், ''நான் இது குறித்து மிகவும் கவலைப்படவில்லை.

ஒரு மனிதருக்கு பதிலாக ஒரு கோழியுடன் கடல் பயணம் மேற்கொண்டதில் சில நன்மைகள் உள்ளதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். மனிதர்களுடன் ஒப்பிடுகையில், மோனிக் எப்போதும் புகார் கூறுவதில்லை.

நான் செல்லுமிடம் எல்லாம் என்னை மோனிக் பின்பற்றும். அது எந்த பிரச்சனையையும் உருவாக்குவதில்லை. 'மோனிக்' என்று நான் குரல் எழுப்பினால் போதும். உடனடியாக, என்னருகில் அமர்ந்து விடும், அற்புதமான குணம் படைத்த மோனிக் எனக்கு துணையாக இருக்கும்.

ஆனால், நான் பொய் சொல்ல மட்டேன். சில சமயம் மோனிக் என் பொறுமையை சோதிப்பாள்'' என்று தன் தோழி குறித்து கைரக் விவரித்தார்.

தனது கடல் பயணத்தின் போது, மோனிக்கை துணையாக கைரக் சேர்த்து கொண்டது குறித்து அவரது குடும்பமும், நண்பர்களும் என்ன நினைக்கிறார்கள்?

''அவர்கள் இதனை வேடிக்கையாக கருதுகிறார்கள்,'' என்று குறிப்பிட்ட கைரக், '' எப்படியும், நான் ஒரு சாதாரண நபர் இல்லை என்று அவர்களுக்கு தெரியும்'' என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

படத்தின் காப்புரிமை Guirec Soudee
Image caption கப்பலின் மேல் தளத்தில் மோனிக்குடன் கைரக்

ஆர்டிக் சமுத்திரம் வழியாக பெரிங் நீரிணைக்கு கீழே அலாஸ்காவில் உள்ள நோம் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதே இந்த இணையின் அடுத்த பயணத் திட்டமாகும். அதன் பின்னர் என்ன திட்டம்?

''அது குறித்து இன்னமும் எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. நாங்கள் இது குறித்து இன்னமும் பேசவில்லை. விரைவில், இது குறித்து பேசுவோம்.

நானும், மோனிக்கும் அதிகமாக பேசி கொள்வோம்.'' என்று முத்தாய்ப்பாக கைரக் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கைரக் மற்றும் மோனிக்கை நீங்கள் பின்தொடரலாம்.