பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக 'த சன்' செய்தித்தாள் பரிந்துரை

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரிட்டனில் அதிகமாக விற்கப்படும் 'த சன்' செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

ஐரோப்பிய ஒன்றியம் வீணானது, அச்சுறுத்துவது, திறமையற்றது என்பது பரவலாக உறுதியாகி இருக்கிறது என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிடுவது பிரிட்டனின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்யவும், கலாசாரத்தை பாதுகாக்கவும் செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Sun

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பரப்புரை மேற்கொள்ளும் முன்னாள் துணைப் பிரதமர் ஜான் பிரெஸ்கோட் இந்த செய்தித்தாளின் பரிந்துரையை நிராகரித்துள்ளார்.

'த சன்' செய்தித்தாளின் உரிமையாளரான ருபர்ட் முர்டோக்கை கேலிசெய்து பிரெஸ்கோட் அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில், “அமெரிக்க குடியுரிமையுடன் இருக்கும் ஆஸ்திரேலிய நபர், பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று கூறுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.