உடற்பருமன் பிரச்சனை, ஊட்டச்சத்தின்மைக்கு வழி வகுக்கிறது - புதிய ஆய்வு

உலகெங்கிலும் அதிகரித்துவரும் உடற்பருமன் பிரச்சனை ஊட்டச்சத்தின்மைக்கு வழிவகுப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உடல் பருமன் பிரச்சனை உலகளாவிய சவால்

2016ம் ஆண்டின் உலக ஊட்டச்சத்து அறிக்கை என்ற இந்த ஆய்வற்க்கை, உலக நாடுகளில் 44 சதவீத நாடுகள் இப்போது போஷாக்கின்மை மற்றும் உடற்பருமன் இரண்டு பிரச்சனைகளாலும், அதிக அளவில் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.

129 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மூன்றில் ஒருவர் ஏதோ ஒரு வகைப் போஷாக்கின்மையால் அவதிப்படுவதாகக் கூறுகிறது.

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இப்போது 'இயல்பாக' இருக்கும் விஷயம் என்று அந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை பொதுவாகப் போஷாக்கின்மை என்பது பசியால் பாதிக்கப்பட்ட , வளர்ச்சி குன்றிய மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் குழந்தைகளுடன் சேர்த்து பார்க்கப்படும் விஷயமாக இருந்து வந்திருக்கிறது.

இதில் இன்னும் பிரச்சனைகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை
'எல்லா நாடுகளிலும் உடற்பருமன் பிரச்சனை'

ஆனால் அதிகரித்துவரும் உடற்பருமன் என்ற பிரச்சனை உலகளாவிய "பெரும் பிரமிக்கத்தக்க சவால்" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த உடற்பருமன் பிரச்சனை உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணப்படுவதாக அவர்கள் கூறினர்.

பல கோடிக்கணக்கானோர் உடற்பருமன் காரணமாகவே போஷாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர அவர்கள் ரத்தத்தில், அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து காணப்படுவதாக இந்த அறிக்கை கூறியது.

இந்த ஆய்வு, போஷாக்கின்மை என்று உலகம் எதைக் கருதுகிறது என்பதையே மறு வரையறை செய்வதாக, இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் கோரின்னா ஹாக்ஸ் கூறினார்.

உலகின் பல நாடுகள் வளர்ச்சி குன்றியிருக்கும் பிரச்சனை மற்றும் எடை குறைவான குழந்தைகள் பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க தரப்பட்ட இலக்குகளை எட்டும் நிலையில் இருக்கின்றன. ஆனால் உடற்பருமன் பிரச்சனையையும் அதனோடு தொடர்புடைய இருதயக் கோளாறு போன்ற உடல் நலக்குறைவு பிரச்சனைகளையும் சமாளிப்பதில் ஒரு சில நாடுகளே முன்னேறி வருகின்றன.

உண்மையில், அதிக எடையுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை , அதே வயது வரம்புக்குட்பட்ட ஆனால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையைத் தொடுமளவு அதிகரித்துவருகிறது என்று அந்தா அறிக்கை கூறுகிறது.

இந்தப் பிரச்சனையை சமாளிக்க மேலும் கூடுதல் நிதி மற்றும் பிற வளங்களை ஒதுக்குவதுதான் நீண்ட காலத்தில் இதை சமாளிக்க உதவும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. நிரூபிக்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்களுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு டாலருக்கும் , 16 டாலர் மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.