பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸுக்கு அஞ்சலி

பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதற்கான காரணங்களை பிரிட்டிஷ் போலீஸார் விசாரித்து வருகிகின்றனர்.

அவர் தனது தொகுதி மக்களை மேற்கு யார்க்ஷயரில் வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டிருந்த போது அவர் சுடப்பட்டு பின் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை. ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான பிரச்சாரம் சனிக்கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளுர்வாசியான 52 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாமி மேர் என்ற அந்த சந்தேக நபர் வலது சாரி அரசியல் அனுதாபி என்றும் மன நல சுகாதார குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வரலாறு உள்ளவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ஜோ காக்ஸ் கொல்லப்பட்ட யார்க்ஷயர் பகுதி கிராமத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு வெளியே பூக்களை குவித்தும், மெழுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பக்கிங்ஹம் அரண்மனை மற்றும் டௌனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கின்றன. காக்ஸின் கணவர் பிரன்டன் காக்ஸ்சை கொன்ற வெறுப்புக்கு எதிராக மக்கள் ஒன்றினைய வேண்டும் என்றார்.