ரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு

படத்தின் காப்புரிமை Getty

ரஷ்யப் போட்டியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது என்ற உலக தடகள சம்மேளனத்தின் முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த முடிவு ஊக்க மருந்து சோதனைகளில் ஏமாற்றுபவர்களை சகித்துக்கொள்வதில்லை என்ற தனது கொள்கையுடன் ஒத்துப்போவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியிருக்கிறது.

யார் தகுதி பெறுபவர்கள் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு தனிப்பட்ட விளையாட்டுகளை நிர்வகிக்கும் அமைப்புகளிடமே இருப்பதாக அது உறுதிப்படுத்தியது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில் அந்தக் கூட்டத்தில் தனக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற ரஷ்யாவின் நம்பிக்கைகளை இந்த அறிக்கை ஏறக்குறைய அற்றுப்போகச் செய்துவிட்டதாக பிபிசியின் விளையாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இப்போது ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது. இதை ரஷ்ய விளையாட்டு அமைச்சரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.