ஜோ காக்ஸூக்கு அஞ்சலி செலுத்த நாடாளுமன்ற சிறப்பு அமர்வு

கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சக நடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸூக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அரிதாக நிகழ்கின்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வு பிரிட்டனில் நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

தன்னுடைய தொகுதியினரை சந்திப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த ஜோ காக்ஸ், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இது பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை PA

பிரதிநிதிகளால் நிறைந்திருந்த அவையில் பேசிய தொழிற்கட்சி தலைவர் ஜெரெமி கோர்பைன், இந்த அம்மையாரின் வாழ்க்கை பிறருக்காக சேவை மற்றும் பரப்புரை செய்வதிலேயே கழிந்துவிட்டது என்று கூறினார்.

அன்பான, உறுதியான, உணர்ச்சிமிக்க முற்போக்கான நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தார் என்று பிரதமர் டேவிட் கேமரன் அஞ்சலி உரையில் புகழாரம் சூட்டினார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக பிரிட்டன் தொடர்வது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் இப்போது நடைபெறவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சக உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது.

ஜோ காக்ஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர், உயர் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து, ஓல்டு பெய்லி மத்திய குற்றவியில் நீதிமன்றத்தில் மூத்த நிதிபதி முன்னதாக, காணொளி இணைப்பு மூலம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.