ஃபார்க் போராளிகளுடனான பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும்: கொலம்பிய அதிபர் சாண்டோஸ்

  • 21 ஜூன் 2016

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நடத்தி வரும் ஃபார்க் போராளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்னும் ஒரு மாதத்திற்குள், ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தான் எதிர்பார்ப்பதாக கொலம்பிய நாட்டு அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பேச்சுவார்த்தையின் போது போராளி தலைவர்களுடன் அதிபர் சாண்டோஸ்

மூன்று ஆண்டுகளாக கியூபாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தால், நாடு ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் என்று இது குறித்து தொலைக்காட்சியில் உரையாடிய அதிபர் சாண்டோஸ் தெரிவித்தார்.

ஜுலை 20-ஆம் தேதிக்குள் போராளிகளுடனான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர இரண்டாவது முறையாக சாண்டோஸ் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

1960-களில் தொடங்கிய ஃபார்க் போராளிகளின் போராட்டத்தால், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். மேலும், பல மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.