'ஓம்' என்ற சொல் பொறிக்கப்பட்ட ஷுக்களை விற்ற பாகிஸ்தான் நபர் மத நிந்தனை சட்டத்தின் கீழ் கைது

இந்துக்களின் புனித சொல்லான 'ஓம்' என்ற சொல் பொறிக்கப்பட்ட ஷூக்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு கடைக்காரரை, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடுமையான மத நிந்தனை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை

நாட்டின் சிறுபான்மை இந்து சமூக மக்களின் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, மனதைப் புண்படுத்தும் விதமாக விற்கப்பட்ட இந்த காலணிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்து சமூக தலைவர்கள் தாக்கல் செய்த புகாரை தொடர்ந்து, டாண்டோ ஆடம் கான் நகரை சேர்ந்த ஜஹான்ஜாயிப் காஸ்கிலி என்ற அந்த கடைக்காரர் கைது செய்யப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைமையதிகாரி ஃபாருக் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மனதைப் புண்படுத்தும் விதமாக விற்கப்பட்ட இந்த காலணிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

''சந்தையில் வேறு ஏதேனும் கடையில், இது போன்ற ஷுக்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய நாங்கள் சோதனைகளை நடத்தி வருகிறோம்'' என்று கூறிய ஃபாருக் அலி, வேண்டுமென்ற இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முயற்சியில் கைது செய்யப்பட்ட கடைக்காரர் இதனை விற்கவில்லை என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் புலப்படுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக ஃபாருக் அலி மேலும் கூறுகையில், ''பத்திரிக்கைகளில் இத்தகவல் வெளியாகும் வரை, கைது செய்யப்பட்ட கடைக்காரருக்கு 'ஓம்' என்ற புனித அடையாளம் குறித்து அறிந்திருக்கவில்லை. மேலும், இதுவரை அவர் எங்கள் விசாரணைகளில் ஒத்துழைப்பு தருகிறார்'' என்று கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால், மேற்கூறிய கடைக்காரருக்கு அதிக பட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்.

தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாண்டோ ஆடம் பகுதியில், பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பெரும்பான்மையானோர் வசிக்கின்றனர்.

பாகிஸ்தானில் ஏறக்குறைய மூன்று மில்லியன் (30 லட்சம்) இந்துக்கள் வசித்து வருகின்றார்கள்.